Published : 25 Nov 2020 11:09 AM
Last Updated : 25 Nov 2020 11:09 AM
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று 12.00 மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என, பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பொதுப்பணித்துறை உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான எஸ்.பாபு, பல்வேறு துறை அலுவலர்களுக்கு இன்று (நவ. 25) அனுப்பியுள்ள கடிதம்:
"சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.
தற்போது, வடகிழக்குப் பருவமழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தினாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உள்ளபடியால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 22.00 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர் வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும்.
தற்போது இன்று (நவ. 25) 22.00 அடியை நெருங்குவதாலும் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4,027 கன அடியாகவும் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று 12.00 மணியளவில் 1,000 கன அடி திறக்கப்படுகிறது. நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும்.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறுன் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது".
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT