Published : 25 Nov 2020 10:41 AM
Last Updated : 25 Nov 2020 10:41 AM
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிளைத் தலைவர் சி.என்.ராஜா, செயலாளர் ஏ.கே.ரவிக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:
"அலோபதி என்ற நவீன ஆங்கில முறை மருத்துவரால் மட்டும் செய்யக்கூடிய பல்வேறு அறுவை சிகிச்சைகளை இனி அயர்வேத மருத்துவர்களும் செய்யலாம் எனவும், அவர்களுக்கும் அதற்கான எம்.எஸ்., பட்டம் வழங்கப்படும் என ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு ஒரு மருத்துவ முறையோடு, இன்னொரு மருத்துவ முறை கலப்பதை இந்திய மருத்துவ சங்கம் எதிர்க்கிறது. ஆயுர்வேத மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றால் மயக்க மருந்தும், அதற்கான செயல் முறைகளும் ஆயுர்வேதத்தில் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, ஆயுர்வேத மருத்துவர்கள், நவீன அலோபதி மருத்துவர்களின் துணையின்றி எந்த ஒரு அறுவை சிகிக்சையையும் செய்ய இயலாது என்பது புலனாகும். நம் பாரம்பரியம் என்று எதையோ தவறாக புரிந்து வைத்திருப்பதன் விளைவுதான் இது போன்ற அறிவிப்புகளாகும்.
நவீன மருத்துவ தடுப்பூசி மூலம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தி வருகிறோம். காசநோய் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை மக்களுக்கு அறிவிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நீண்ட காலம் பாடுபட்டு கட்டியெழுப்பியுள்ள மருத்துவத்துறையின் உன்னதத்தை பாதுகாக்கும் கடமை இந்திய மருத்துவ சங்கத்துக்கு உள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT