Published : 19 Oct 2015 04:28 PM
Last Updated : 19 Oct 2015 04:28 PM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் மொத்தம் 2,626 படுக்கைகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 2,600 முதல் 2,800 உள் நோயாளிகளும், 9,000 வெளி நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணிபுரிய வே ண்டும். அதன்படி, ராஜாஜி மருத் துவமனையில் தினமும் வரும் 9,000 வெளிநோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 90 செவிலியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், செவி லியர் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த சுகாதார சமூக செயற்பா ட்டாளர் ஆனந்தராஜ் கூறியது:
இந்திய மருத்துவக் கவுன் சில் நிர்ணயித்துள்ளபடி போது மான செவிலியர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியவில்லை. 1,200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி யாற்ற வேண்டும். ஆனால், இங்கு 338 நிரந்தர செவிலியர்கள், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 81 டெபுடேஷன் செவிலியர்கள் உட்பட 420 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 49 வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு 2 செவிலியர்கள் வீதம் 98 செவிலியர்கள் கட்டாயம் பணி யாற்ற வேண்டும். ஆனால், 49 செவிலியர்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றனர். பொது வார்டில் 8 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என விதி உள்ளது. அனேக பொது வார்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
செவிலியர்களுக்கு வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை என்று கழித்தாலும், சராசரியாக ஒவ்வொரு ஷிப்டிலும் 60-லிருந்து 80 நோயாளிகளுக்கு 3 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இங்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே ஒரு ஷிப்டில் பணியில் உள்ளனர்.
பல வார்டுகளில் 150-க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு, ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். பிரசவ வார்டில் அறுவை சிகிச்சை முடிந்தபிறகு தாய்மார்களை, குழந்தைகளுக்கு பால் ஊட்ட பழக்குவது, வலி உள்ளிட்ட இதர பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
ஒரு செவிலியரே 150-க்கும் மேற்பட்ட பெண்களை கவனிப்பதால், தரமற்ற மருத்துவச் சேவையே நோயாளிகளுக்கு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘போதுமான செவிலியர்கள் உள்ளனர்’
இதுகுறித்து மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்டபோது, மருத்துவமனையில் மூன்று ஷிப்டுகளிலும் போதுமான செவிலியர்கள் பணிபுரிகின்றனர். டெபுடேஷன் மூலமும் தேனி, சிவகங்கை வெளி மாவட்டங்களில் இருந்தும் செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 7400 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தினசரி 2 பேர் வீதம் சராசரியாக மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி செவிலியர்கள் பணியாற்றுவது சாத்தியமில்லாதது. போதுமான செவிலியர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT