Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM
மகனை காவல் நிலையம் அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி அருகே போலீஸார் முன்பு பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பாரதியார் நகரைச் சேர்ந்த சகுந்தலா(48) கட்டிடத் தொழிலாளி. இவரது கணவர் தர்மராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சகுந்தலாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும், பிரசாந்த் (22), பிரதீப் (20) என்ற மகன்களும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்தார்
பிரசாந்தும், பிரதீப்பும் பெயின்டர்களாக வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரதீப், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா தலைமையிலான போலீஸார் குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக பிரதீப்பை நேற்று முன்தினம் நள்ளிரவில் அழைத்துச் சென்றனர். பின்னர், அவரது அண்ணன் பிரசாந்தையும் விசாரணைக்காக அழைத்துச் செல்ல போலீஸார் வந்தனர். அப்போது பிரசாந்தை அழைத்துச் செல்லாதீர்கள் என்று தாயார் சகுந்தலா தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரசாந்தை போலீஸார் வாகனத்தில் ஏற்றினர். இதனால் மனமுடைந்த சகுந்தலா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
எஸ்பி விளக்கம்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அவர் கூறும்போது, “சுத்தமல்லியை அடுத்த கோமதிநகரில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பிரம்மநாயகம் என்பவரது வீட்டில் கடந்த 3-ம் தேதி நகை, பணம், லேப்டாப் ஆகியவை திருடப்பட்ட வழக்கில் பிரதீப் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட லேப்டாப் பிரதீப் வீட்டில் இருப்பதை அறிந்த போலீஸார், அதை மீட்க செல்லும்போது, அவரது தாய் சகுந்தலா மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரை மீட்டு ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே இறந்துவிட்டார். பிரதீப் மீது ஏற்கெனவே போக்ஸோ சட்டம் மற்றும் ரத்த காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 வழக்குகள் உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT