Last Updated : 08 Oct, 2015 05:52 PM

 

Published : 08 Oct 2015 05:52 PM
Last Updated : 08 Oct 2015 05:52 PM

குலசேகரப்பட்டினம் தசரா பக்தர்களுக்காக 22 ஆண்டுகளாக கிரீடம் தயாரிக்கும் கலைஞர்: இறை தொண்டாக செய்வதாக நெகிழ்ச்சி

தசரா வேடம் புனையும் பக்தர்களுக்காக கடந்த 22 ஆண்டுகளாக விரதமிருந்து அலுமினிய கிரீடங்களை தயாரித்து வருகிறார் திருச்செந்தூரை சேர்ந்த கலைஞர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, சூரசம்ஹாரம் தினத்தன்று கோயிலில் காணிக்கையை செலுத்தி வழிபடுவர்.

அளவுகொடுத்து ஆர்டர்

இந்த ஆண்டுக்கான தசரா விழா வரும் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வேடம் அணியும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். சிலர் தங்களின் உடல் அளவுக்கு தகுந்தபடி பொருட்களை தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.

எந்த வேடம் அணிந்தாலும் அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பக்தர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். குலசேகரப்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேடமணியும் பொருட்கள் விற்பனை செய்ய புதிதாக பல கடைகள் தோன்றியுள்ளன.

கிரீடம் தயாரிப்பு

திருச்செந்தூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் இ.மாடசாமி ஆசாரி (65). கடந்த 22 ஆண்டுகளாக தசரா வேடமணியும் பக்தர்களுக்காக அலுமினிய கிரீடங்களை தயார் செய்து வருகிறார். 108 நாட்கள் விரதம் இருந்து இந்த பணிகளை செய்து வரும் மாடசாமி, லாப நோக்கத்துக்காக அல்லாமல் இறை தொண்டாகவே செய்து வருவதாக கூறுகிறார்.

‘தி இந்து’ நாளிதழிடம் அவர் கூறும்போது, ‘மூன்று தலைமுறைகளாக தசரா பக்தர்களுக்காக அலுமினியத்தில் கிரீடங்களை தயாரித்து வருகிறோம். நான் 22 ஆண்டுகளாக இந்த வேலையை செய்கிறேன். கிரீடம் வடிவமைத்தல், செய்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நான் ஒருவனே செய்கிறேன்.

பக்தர்களின் தலை அளவுக்கு ஏற்ப 23 அங்குலம் முதல் 32 அங்குல அளவு கொண்ட கிரீடங்களை உருவாக்குகிறேன். முன்கூட்டியே ஆர்டர் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கிரீடம் செய்து கொடுப்பேன். சென்னை, கோவை, மும்பை போன்ற வெளியூர் பக்தர்கள் என்னிடம் ஆர்டர் கொடுத்து கீரிடம் வாங்கி செல்கின்றனர்.

அம்மன் கிரீடங்கள்

அலுமினிய கிரீடத்தை ரூ. 500 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்கிறேன். அதிக லாபம் கிடையாது. இறைத் தொண்டாக நினைத்தே இதை செய்கிறேன். காளியம்மன், மீனாட்சியம்மன் போன்ற அம்மன் கிரீடங்களே அதிகம் செய்கிறேன். மற்ற சுவாமி கிரீடங்களும் செய்து கொடுக்கிறேன்.

இதனை தவிர சுவாமிகளின் கைகளையும் செய்து கொடுப்பேன். மேலும், காளியம்மன் கையில் வைத்திருக்கும் வாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களை இரும்பில் செய்து கொடுப்பேன். வாள், சூலாயுதம் போன்றவற்றை ரூ.300 முதல் ரூ. 400-க்கு விற்பனை செய்வேன்.

3 மாதமே வேலை

பெரிய கீரிடம் செய்ய 2 நாட்கள் வரை ஆகும். சிறியதாக இருந்தால் ஒரு நாளில் 2 கிரீடம் செய்யலாம். ஆண்டுக்கு சராசரியாக 50 கிரீடங்கள் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆண்டு 75 கிரீடங்கள் செய்ய ஆர்டர் எடுத்து பாதி கிரீடங்களை பக்தர்கள் வாங்கிச் சென்றுவிட்டனர். மீதி கிரீடங்கள் முடியும் தருவாயில் உள்ளன. 3 மாதங்கள் மட்டுமே இந்த வேலை. மற்ற காலங்களில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் பணிகளில் ஈடுபடுவேன்.

தற்போது அட்டையில் கிரீடம் உள்ளிட்ட பொருட்கள் ரெடிமேடாக வந்துவிட்டன. மேலும், அலுமினியத்தில் நுணுக்கத்தோடு செய்ய கலைஞர்களும் குறைந்துவிட்டார்கள். எனவே, காலப்போக்கில் இந்த தொழில் இருக்குமா என்பது சந்தேகமே’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x