Published : 24 Nov 2020 05:55 PM
Last Updated : 24 Nov 2020 05:55 PM
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவராக மீண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் இன்று ( நவ.24) திருச்சியில் நடைபெற்றது. பேரமைப்பின் ஆட்சி மன்றக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வுக்குழுத் தலைவரும் மூத்த வணிகருமான ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைமை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.
கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பேரமைப்பின் செயல்பாடுகள், அதன் வளர்ச்சி, வணிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தியது, குறிப்பாகக் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இடையறாது பணியாற்றிய நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு, சென்னையில் பேரமைப்பின் தலைமை இயக்ககம் கட்டுவதற்காக வாங்கப்பட்டுள்ள இடத்துக்கான தொடர் முயற்சி, பேரமைப்பின் முரசு இதழின் வளர்ச்சி மற்றும் நிலைத்த தன்மை, மத்திய - மாநில அரசுகளுடனான சுமுக உறவு, அனைத்துக் கட்சி மற்றும் தோழமை அமைப்புகளுடன் நல்லுறவைப் பேணுதல், வணிகர்களின் நலனுக்காக எந்நேரமும் பணியாற்றி வரும் பாங்கு உள்ளிட்டவை இக்கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில், பன்முகத் தன்மையுடன் பணியாற்றிய தற்போதைய தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவே மீண்டும் மாநிலத் தலைவராகத் தொடர வேண்டும் என்று நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஏகமனதாக மாநிலத் தலைவராக விக்கிரமராஜாவே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து திருச்சி கோவிந்தராஜூலு பேரமைப்பின் பொதுச் செயலாளராகவும், சென்னை ஹாஜியார் சதக்கத்துல்லா பொருளாளராகவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் சோழா சி.மகேந்திரன், வி.சத்தியநாராயணன் உட்படத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT