Last Updated : 24 Nov, 2020 04:51 PM

 

Published : 24 Nov 2020 04:51 PM
Last Updated : 24 Nov 2020 04:51 PM

நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு; அரசு அலுவலகங்களில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்

தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவசரத் தேவைக்கு அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (நவ. 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயலானது, நாளை (நவ. 25) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 125 கி.மீ. அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள அவசரத் தேவைகளுக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரக் கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்: 1077 மற்றும் 04179-222111 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இது மட்டுமின்றி, அந்தந்த வருவாய் கோட்டங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அவசரக் கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் கனமழை மற்றும் புயல் காரணமாக அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் 04179-220088 அல்லது 9445000418, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04174-234488 அல்லது 7598000418, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் 04179-220091 அல்லது 9445000511, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் 04179-242299 அல்லது 9080200043, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் 04174-232184 அல்லது 9445000512, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் 04174-221502 அல்லது 9442315427 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

கனமழை காரணமாக குடிசைகள், வெள்ளம் வரக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அருகேயுள்ள பள்ளிக் கட்டிடங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், அத்தியாவசியப் பொருட்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

ஏரிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமாக இருப்பதால் நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள் வெளியே செல்ல பெற்றோர் அனுமதி வழங்க வேண்டாம். கனமழை காரணமாக மின்கம்பங்கள், மின்வயர்கள் கீழே விழும் ஆபத்துள்ளதால் குழந்தைகளைப் பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தீப்பெட்டிகள், மெழுவர்த்திகள், பேட்டரி விளக்குகள், குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க வேண்டும்".

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x