Published : 24 Nov 2020 04:42 PM
Last Updated : 24 Nov 2020 04:42 PM
புயல் அச்சம் காரணமாகக் கடலூர் மாவட்ட மக்கள் வீட்டில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் 7 கடலோர மாவட்டங்களில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளும் விதமாகப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின்போதும் பலத்த சேதங்களை எதிர்கொள்ளும் மாவட்டமாகக் கருதப்படும் கடலூர் மாவட்டத்திலும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 120 பேர் அடங்கிய தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவும் கடலூர் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதுதவிர வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் அடங்கிய பாதுகாப்புக் குழுவினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட மக்களிடையே புயல் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
புயலின் வேகம் அதிகரித்தால், மரங்கள் விழுந்து குடியிருப்புகள் சேதமாகிவிடும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது குடியிருப்புப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டி வருகின்றனர். இதுதவிர நெடுஞ்சாலை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் சாலையோரங்களில் உள்ள மரங்களையும் வெட்டி வருகின்றனர்.
மருங்கூர் ஊராட்சியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த ராமலிங்கம் என்பவரிடம் கேட்டபோது, கடந்த ‘தானே’ புயலின் போது மிகுந்த சேதத்தை எதிர்கொண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெட்டி வருவதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில் பேரிடரைப் பயன்படுத்தி சிலர் சுயநலத்திற்காக வருவாய் ஈட்டி வருவதாகவும், எஞ்சி நிற்கும் பழமையான மரங்களையும் வெட்டும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கிராமப் புறங்களில் மரக்கன்றுகள் நட்டு வந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, புயல் உருவெடுத்துள்ளதால் ஏற்கெனவே இருந்த மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT