Published : 24 Nov 2020 04:09 PM
Last Updated : 24 Nov 2020 04:09 PM
‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ‘108’ அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத் துறையால் தமிழ்நாடு முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியன பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும், கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தேவை ஏற்படின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து 108 அவசரகால ஊர்திகளை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகனமழையால் தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்தாலும் தகவல்கள் கிடைக்கப்பெறும் வகையில் 108 அவசரகால ஊர்திகளை காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து அவசரகால ஊர்திகளிலும் எரிபொருள் முழுவதுமாக நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
108 அவசரகால சேவை கட்டுப்பாடு மையத்திற்கு அதிக அளவிலான அழைப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கூடுதல் பளுவினை எதிர்கொள்ளும் வகையில் 108 அவசரகால மாநில கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புயல் காரணமாக 108 அவசரகால கட்டுப்பாட்டு சேவை மையத்தில் மின் துண்டிப்பினை சமாளிக்கும் வகையில் 2000 லிட்டர் எரிபொருளுடன் 2 ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட மேலாளர்கள், 108 அவசரகால மேலாண்மை பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
108 அவசரகால சேவையானது காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிக எண்ணிக்கையில் 108 வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
108 வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்து இயக்குவதற்கு மண்டல போக்குவரத்து பொறியாளர்கள் தயார் நிலையில் பகுதி வாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மரங்கள், பலவீனமான கட்டிடங்கள் விழக்கூடும் என்பதால் அனைத்து 108 அவசரகால ஊர்தியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஊர்திகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையத்திற்குள், தற்பொழுது தற்காலிக அவசரகால செயல்பாட்டு மையம் (EOC) அமைக்கப்பட்டுள்ளது. இது 24 மணிநேரமும் அவசரகால அழைப்புகளை கண்காணித்து, அரசு வெளியிடும் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் குறுஞ்செய்திகளாகவும், வாட்ஸ்அப் மூலமும் வழங்கும். மேலும், பொதுமக்கள் அவசரகால செயல்பாட்டு மைய எண்களான 044-28888105 / 7338895011 ஆகியவற்றை தொடர்புகெண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்”.
இவ்வாறு சுகாதாரத்துறைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT