Published : 24 Nov 2020 02:38 PM
Last Updated : 24 Nov 2020 02:38 PM
அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகனுமான ராஜேந்திரகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் திரைத்துறையிலிருந்து முதன் முதலில் கட்சியில் இணைந்து 1962-ல் திரைத்துறையிலிருந்து முதல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தேனி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவிலேயே திரைத்துறையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நடிகர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.
எம்ஜிஆர், சிவாஜிக்கு சம காலத்தவரான எஸ்.எஸ்.ஆர் திமுகவில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களில் ஒருவராக இருந்தார். வசன உச்சரிப்பு, யதார்த்த நடிப்பு மூலம் தமிழக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்.
பின்னர் 1970-76-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1980-ல் அதிமுகவில் இணைந்த அவர் ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சிறிது சிறிதாக அரசியலிலிருந்து விலகினார். 2014-ம் ஆண்டு காலமானார். எஸ்.எஸ்.ஆரின் மகன் ராஜேந்திர குமார் அதிமுகவில் உள்ளார்.
அதிமுகவின் முன்னாள் மக்களவை உறுப்பினரான எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரகுமார் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதுகுறித்து திமுக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“திமுக தலைவர் முன்னிலையில் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், சென்னை தெற்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகனுமான ராஜேந்திரகுமார், திமுகவில் இணைந்தார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அ.ராசா, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை தெற்கு மாவட்டக் செயலாளர் மா.சுப்பிரமணியன், ஆகியோர் உடனிருந்தனர்”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT