Published : 24 Nov 2020 01:32 PM
Last Updated : 24 Nov 2020 01:32 PM
எழுவர் விடுதலை தொடர்பாக, உரிய முடிவை எடுப்பதாக எங்களுக்கு ஆளுநர் உறுதியளித்துள்ளார். காலதாமதம் குறித்துக் கேட்டபோது, அதிலுள்ள சட்டரீதியான பார்வையை ஆளுநர் விளக்கினார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ.24), முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள எழுவர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தான் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார்.
இச்சந்திப்பின்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதனிடையே 2018, செப்டம்பர் மாதம், இதற்காக தமிழக அமைச்சரவை கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, நாங்கள் ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். சட்டரீதியாக, மனிதாபிமானத்துடன் முடிவெடுக்க வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறோம்.
ஏறக்குறைய 29 ஆண்டுகள் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார். அதனை ஆளுநரிடத்தில் நாங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
இது தொடர்பாக, உரிய முடிவை எடுப்பதாக எங்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார். காலதாமதம் குறித்துக் கேட்டபோது, அதிலுள்ள சட்டரீதியான பார்வையை விளக்கினார்.
தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதனை ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT