நிவர் புயல் எதிரொலி; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
நிவர் புயல் தொடர்பாக பிரதமர் மோடி, முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
'நிவர்' புயல் நாளை (நவ. 25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
புதுச்சேரி மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் எனவும் பிரதமர் மோடி முதல்வர் நாராயணசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரையில் கடல் அலை வேகம் அதிகரித்தது. 12 அடி வரை துறைமுகப் பகுதியில் அலை வேகமாக வீசத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே கடலிலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில் பாதுகாப்போடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
