Last Updated : 24 Nov, 2020 11:17 AM

 

Published : 24 Nov 2020 11:17 AM
Last Updated : 24 Nov 2020 11:17 AM

நிவர் புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கும்!- தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

ஆசிரியர் செல்வகுமார்

நாகை

வங்கக் கடலில் அதிவேகப் புயலாக உருவெடுத்துள்ள நிவர் புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கவே வாய்ப்பு அதிகம் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் நாளை (நவ. 25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.

சென்னையிலிருந்து தஞ்சை மற்றும் திருச்சி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இன்று (நவ. 24) மதியத்துடன் நிறுத்தப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புயலின் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்கள் தயாராகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும்படியும், இரண்டு நாட்களுக்கு யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், மரங்களின் கிளைகளை வெட்டி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் படியும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் நாளை பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டாலும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளரான நாகை மாவட்டம் தகட்டூர் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் இந்தப் புயல் டெல்டா பகுதியில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கவே வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்.

வர்தா, ஓகி, நிஷா, நிலம், தானே உட்பட பல புயல்களையும் அது உருவாகும் நாள், கடக்கும் நேரம், மற்றும் இடத்தையும் முன்கூட்டியே அறிவித்திருக்கும் செல்வகுமார் நிவர் புயல் குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசினார்.

"தற்போதுள்ள சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது கடலில் உள்ள நீரோட்டங்கள் காரணமாக நிவர் புயல் வட மேற்காக நகர்ந்து செல்வது தடுக்கப்படுகிறது. அதனால்தான் அது வேகம் குறைகிறது. அதன் விளைவாக அது காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்றுதான் தெரிகிறது. இந்தப் பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதால் நான் இன்னும் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் மேலும் சில பகுதிகளை இதில் சேர்க்கிறேன்.

கடல் நீரோட்டத்தின் விளைவாக புயல் கடலூர் - நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் கரையைக் கடக்கவே வாய்ப்பு அதிகமாக இருக்கும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் காரைக்காலுக்கும் கோடியக்கரைக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 120 முதல் 150 கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். காற்றுடன் அதி கனமழையும் பெய்யலாம் என்பதால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புயலுடன் அதிக மழையும் சேர்வதால் 24-ம் தேதி இரவு முதல் 26-ம் தேதி அதிகாலை வரை மக்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். கூரை வீடுகளில் இருப்பவர்கள், ஷீட் மற்றும் தகர மேற்கூரை வேய்ந்தவர்கள் இன்னும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கிக்கொள்வது நல்லது".

இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x