Published : 30 Oct 2015 09:31 PM
Last Updated : 30 Oct 2015 09:31 PM
மதுரை திருவனந்தபுரம் இடையேயான இருவழி ரயில்பாதை திட்டத்துக்கான இறுதி ஆய்வுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் தாமதத்தால், அகில இந்திய அளவில் நடப்பாண்டு ஒப்புதல் பெற்றுள்ள 14 திட்டங்களில் ஒன்று கூட தமிழகத்துக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்புபாதையில் சென்னை செங்கல்பட்டு மற்றும் மதுரை திண்டுக்கல் இடையே இருவழிப்பாதை உள்ளது. செங்கல்பட்டு விழுப்புரம் மற்றும் விழுப்புரம் - திண்டுக்கல் இடையே இருவழிப்பாதையாக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டுக்குள் பணி முடிக்கப்பட்டு சென்னை - மதுரை இடையே இருவழிபாதையில் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் மதுரை - கன்னியாகுமரி இடையேயான இருப்புப்பாதையை இருவழிப் பாதையாக்கும் பணி பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது.
246 கி.மீ. தூரம்
கன்னியாகுமரி - மதுரை இடையேயான 246 கி.மீ. தூர வழித்தடத்தை இரு வழிப்பாதையாக மாற்றுவதற்கு 2012-13-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு நடைபெற்றது. இத்திட்டம் செயல்படுத்த ரூ. 1,926 கோடி தேவைப்படும் என ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
நடப்பாண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில், `இத்திட்டம் மதுரை மணியாச்சி தூத்துக்குடி, மணியாச்சி திருநெல்வேலி நாகர்கோவில், கன்னியாகுமரி திருவனந்தபுரம் என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
ஆய்வுக்கு ரூ. 3 கோடி
இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ராம் கூறியதாவது:
அகில இந்திய அளவில் மொத்தம் 77 இருவழிப்பாதை பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத் தில் மதுரை திருவனந்தபுரம் இடையேயான திட்டத்துக்கு போக்குவரத்து சர்வே, தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வை மேம்படுத்துதல், முழுமையான திட்ட அறிக்கை தயாரித்தல், ரேட் ஆப் ரிட்டர்ன் கணக்கீடு செய்தல் ஆகிய ஆய்வுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு கி.மீ. தூரம் ஆய்வு மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் 3.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தாமதம் எங்கே?
இப்பணிகள் நிறைவு பெற்றதும் திட்டங்களுக்காக அறிக்கையை ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பித்து, நிதி ஒப்புதல் பெற்றுவிட்டால் ஒப்பந்தப்புள்ளி கோரி உடனடியாக இருவழிப்பாதை பணியை தொடங்கி விடலாம். ஆனால், தெற்கு ரயில்வே இந்த திட்டங்களுக்கான முழு அறிக்கையை ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிப்பதில் கால தாமதம் செய்து வருகிறது. இதனால் திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
தென்மாவட்டங்கள் வளரும்
இருவழிப்பாதை பணி நிறைவு பெற்றுவிட்டால் ரயில்களின் பயணநேரம் கணிசமாக குறையும். மதுரை, சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை கன்னியாகுமரி வரை நீட்டிக்க முடியும். தற்போது கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம் மார்க்கம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் வீதம் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுவது போல், தமிழகத்திலும் இயக்க பிரகாசமான வாய்புகள் உருவாகும்.
தெற்கு ரயில்வே தாமதம்
அகில இந்திய அளவில் நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 77 திட்டங்களில், எட்டு திட்டங்கள் நிதி முதல்நிலை அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தபுள்ளி கோர கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஆறு திட்டங்கள் அனுமதிக்காக நிதி ஆயோக் அமைப்பின் அனுமதிக்காக பரிசீலனையில் உள்ளன. இந்த 14 திட்டங்களில் ஒரு திட்டம் கூட தெற்கு ரயில்வே மண்டலம் செயல்படுத்தும் திட்டம் இல்லை.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்விஷயத்தை கவனித்து பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT