Published : 23 Nov 2020 07:58 PM
Last Updated : 23 Nov 2020 07:58 PM
வங்கக் கடலில் அதி தீவிரப் புயலாக உருவெடுத்துள்ள நிவர் புயல் கடலூரிலிருந்து மகாபலிபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், டெல்டா பகுதியில் இயக்கப்படும் பல ரயில்களை ரத்து செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாளை (நவ.24) மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்குத் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்களும், சென்னையிலிருந்து திருச்சி வரும் விரைவு ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்களும், சென்னையிலிருந்து தஞ்சை வரும் விரைவு ரயில்களும் நாளையும் நாளை மறுதினமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூரு- மயிலாடுதுறை ரயில் சேவை நாளை (நவ.24-ம் தேதி) திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை- மைசூரு ரயில் சேவை நவ.25-ம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது. அதேபோல எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நாளை திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT