Published : 23 Nov 2020 07:30 PM
Last Updated : 23 Nov 2020 07:30 PM
நிவர் புயலை எதிகொள்ள, காரைக்கால் மாவட்டம் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகப் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி வரும் நிவர் புயல் நாளை மறுநாள்(நவ.25) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் இன்று (நவ.23) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நிவர் புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும், கனமழை பெய்யும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கும், அரசு சொத்துகளுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பொதுப்பணித்துறை, மின்சாரம், மருத்துவம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்துக்கென நிரந்தரமாகப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த அதிகாரிகள் எந்த சமயத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் 1070 என்ற இலவசத் தொலைபேசி எண் 24 மணி நேரமும் அவசரத் தேவைகளுக்காகச் செயல்படும்.
குடிநீர், மின் தேவைக்கான மாற்று ஏற்பாடுகள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான ஏற்பாடுகள், கரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ அவசரத் தேவைக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்டவற்றைச் செய்து, நிவர் புயலை எதிர்கொள்வதற்கான உத்தரவுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மக்களுக்கான தகவல்களை வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்.
40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நாளை (நவ.24) காரைக்கால் வரவுள்ளது. தேவை ஏற்படின் ஏற்கெனவே பயிற்சி பெற்றுள்ள காரைக்காலில் உள்ள காவலர்களும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் இணைந்து செயல்படுவார்கள். அரிசி உள்ளிட்ட தேவையான பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடலோரப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 16 அவசர உதவிப் பணிகளுக்கான குழுக்கள் களச் சூழலுக்கேற்பப் பணியாற்றும். 74 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 விசைப்படகுகள் கடலில் உள்ளன. ஆந்திரா, குஜராத் போன்ற தூரமான கடல் பகுதிக்கு சென்றிருந்தால் அருகில் உள்ள கரைப் பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT