Published : 23 Nov 2020 07:13 PM
Last Updated : 23 Nov 2020 07:13 PM
எங்களைக் கைது செய்தாலும், வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலை, பீளமேட்டில் பாஜக மாநகர் மாவட்டக் கட்சி அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (23-ம் தேதி) நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மத்திய இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்று புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினர். இதில், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவர்கள் கனகசபாபதி, அண்ணாமலை, மாநகர் மாவட்டத் தலைவர் நந்தகுமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ''தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. 60 ஆயிரம் பூத்களில், 48 ஆயிரம் பூத்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் தொகுதிப் பொறுப்பாளர்களையும் அறிவிக்க உள்ளோம். கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த அரசு எங்களைக் கைது செய்தாலும், நாங்கள் தொடர்ந்து வேல் யாத்திரையை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வரும் 5-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். இந்த வேல் திமுக, தி.க.வை அழிக்க வந்த வேல். தேசத்துக்கு எதிரானவர்களை, துரோகிகளை அழிக்க வந்த வேல். வேல் யாத்திரைக்கு இங்குள்ள இளைஞர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி., வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத அப்பகுதி மக்களிடம் இருந்து வேளாண் சட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
கோவை மாநகர் மாவட்டத்தைப் போல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 22 மாவட்டங்களில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது கோவையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கட்டிடம், 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவால் திறந்து வைக்கப்பட உள்ளது. வேல் யாத்திரை நிகழ்வுகளில் எப்போதும் கைது செய்யப்படுவது போலவே நேற்றும் என்னைக் கைது செய்து விடுவித்தனர்'' என்றார்.
மேலும், அவரிடம், ''வேல் இல்லாமல் முருகனுடன் சென்றிருந்தால் நாங்களும் உடன் வந்திருப்போம்'' என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, ''யாத்திரைக்கு வராமல் இருப்பதற்குச் சாக்காக கே.எஸ்.அழகிரி அப்படிச் சொல்லியிருக்கலாம். வேலையும், முருகனையும் பிரித்துப் பார்க்க முடியாது'' என எல்.முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT