Published : 23 Nov 2020 01:18 PM
Last Updated : 23 Nov 2020 01:18 PM
நிவர் புயல் கரையைக் கடக்கும்போது பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும். அது மின்வெட்டு அல்ல, எச்சரிக்கைக்காக. புயல் கரையைக் கடந்தபின் நிலைமையை ஆராய்ந்து மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்படும். புயல் நிலவரத்தைச் சமாளிக்க உரிய முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் மின்வாரியம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு 740 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது வலுப்பெற்று புயலாக மாறி (நிவர்) நாளை மறுநாள் பிற்பகலில் காரைக்கால் மற்றும் தமிழ்நாடு கடற்கரை அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை முகமையும் பாதுகாப்பாக இருக்க எச்சரித்துள்ளது. இந்நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
''முதல்வர் உத்தரவுப்படி இந்த ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. புயலை எதிர்கொள்ள என்னென்ன தேவையோ அதை தினந்தோறும் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்போம். மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். ஒவ்வொரு அலுவலகத்திலும் வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. மின் கம்பம் பாதிக்கப்பட்டிருந்தால், அதைப் புகைப்படமாக எடுத்து அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு 60,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
1912 என்கிற ஹெல்ப் லைன் எண் உள்ளது. என்னுடைய வீட்டில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி உள்ளது. என்னுடைய எண்ணுக்கு எந்த நேரமும் அழைத்துச் சொல்லலாம். உரிய நடவடிக்கை எடுப்பேன். எந்தப் பகுதிகளில் எல்லாம் தாழ்வான மின்கம்பிகள் உள்ளதோ ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
கஜா புயலின்போது 3 லட்சத்து 30 ஆயிரம் மின் கம்பங்கள் புதிதாகப் போடப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. இருந்தாலும் எங்காவது பாதிப்பு இருந்தால் உடனடியாக இன்றைய தினத்திலிருந்து ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறோம், ஏதாவது பாதிப்பு இருந்தால் அது சரி செய்யப்படும். கடலூர் மாவட்டம் அதிகமாக மழை இருக்கின்ற மாவட்டம். வடிகால் பகுதியாக கடலூர் இருப்பதால் தற்போது புதிதாக உலக வங்கி உதவியுடன் புதைவட தளமாக்கும் பணி 75 சதவீதம் முடிந்துவிட்டது.
விரைவில் அதுவும் முடிந்துவிட்டால் வரும் காலங்களில் எந்த பாதிப்பும் வராது. அதேபோன்று மாமல்லபுரம் நகரம் முழுவதும் புதைவடத் தளமாக இருப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது. சென்னையைப் பொறுத்தவரை 75% ஈசிஆர் பகுதியில் மட்டும் மின்கம்பி மேலே செல்கிறது. கடலூரில்தான் மழை அதிகம் என்பதால் முன்னுரிமை கொடுத்துச் செய்து வருகிறோம். அங்குதான் மழை அதிகம். வடிகால் பகுதியாக உள்ளது.
நாகப்பட்டினத்திலும், வேளாங்கண்ணி பகுதியிலும் புதைவடப் பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரம்பலூரில் பணி நடந்து வருகிறது. தற்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பை முன்னிட்டு மின்வாரியப் பணிகள் இருக்கும். பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும்.
உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். கஜா புயல் அளவுக்கு இருக்காது. கஜா புயலின்போது சிறப்பாகப் பணியாற்றியதுபோன்று இந்த முறையும் பணியாற்றுவோம். எந்தப் பகுதியில் புயல் கரையைக் கடக்கிறதோ அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும். காரைக்காலில் ஆரம்பித்து மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப பணியாளர்கள், உபகரணங்கள் தயாராக உள்ளோம். 1.5 லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன.
மழை அதிகமாக இருக்கும்போது புயல் கரையைக் கடக்கும். அந்த நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும். கரையைக் கடந்ததற்குப் பின் மீண்டும் எங்கெல்லாம் பாதிப்பு உள்ளதோ அது சரி செய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்படும். ஏனென்றால் மக்கள் பாதுகாப்பு மிக முக்கியம். பாதுகாப்பு கருதி அந்த நேரத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க இருக்கிறோம். அதை மின்வெட்டு என்று நினைத்து விடக்கூடாது.
புயலைச் சந்திக்க மின்வாரியம் தயாராக உள்ளது. புயல் 25-ம் தேதி கரையைக் கடக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். நாங்கள் வானிலை ஆய்வு மையம், பேரிடர் மேலாண்மையுடன் இணைந்து புயல் கரையைக் கடக்கும் இடத்தில் அந்த நேரத்தில் மின் இணைப்பைத் துண்டிப்போம். பின்னர் இணைப்பு தரப்படும்''.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT