Published : 13 Oct 2015 03:39 PM
Last Updated : 13 Oct 2015 03:39 PM
‘உணவை அளவாகச் சமையுங்கள், வீணாக்காதீர்கள்’ என விழிப்புணர்வு வாசகங்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் ‘கூடுதலாக உணவைச் சமையுங்கள்; மீதமிருப்பதை எங்களிடம் கொடுங்கள்’ எனக்கூறி மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார் கோவையைச் சேர்ந்த ராஜாசேதுமுரளி.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த இவர் ‘பசியாற சோறு’ என்ற அமைப்பைத் தொடங்கி தற்போது நண்பர்கள் 20 பேருடன் இணைந்து இந்த சேவையை செய்து வருகிறார். நாடகங்களிலும், திரைப்படங்களிலும் குறிப் பிடத்தகுந்த வேடங்களில் இவர் நடித்து பெயர் பெற்றிருந்தாலும், ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதையே தனது முழுநேர சேவையாகவும், அதுவே மனநிறைவைத் தருவதாகவும் கூறுகிறார்.
அவர் கூறியதாவது: சாலையோரங்களில் உணவுக்காக ஏங்கியிருப்பவர்களைப் பார்க்கும் போது, ஒருவேளை உணவாவது அவர்களுக்கு கொடுக்க வேண்டுமெனத் தோன்றும். அதற்காகவே 20 வருடங்களாக இந்த அமைப்பை நடத்தி வருகிறேன். என்னால் எல்லா ஆதரவற்றவர்களுக்கும் உணவளிக்க முடியாது. ஆனால், எங்கெல்லாம் உணவு கொடுக்கிறார்களோ, எங்கெல்லாம் உணவு மீதமிருக்கிறதோ அதைச் சேகரித்துக் கொடுக்க முடியும்.
சிறுவயதில், ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மரவள்ளிக் கிழங்கின் தோலை தின்று நான் பசியாறியிருக்கிறேன். ஒருவேளையாவது நல்ல உணவு கிடைக்காதா என நான் ஏங்கிய நாட்கள் எல்லாம் இருக்கின்றன. எவ்வளவு முன்னேறினாலும் சிரமப்பட்ட காலத்தை மறக்கக்கூடாது என்பார்கள். அவ்வப்போது எனது கடந்த காலத்தை யோசித்து பார்க்கும்போது, நான் இப்போது உண்கின்ற உணவின் அருமை தெரிகிறது.
தொடக்கத்தில் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலிருந்து எங்கள் பணி தொடங்கியது. பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளின்போது அன்னதானம் வழங்கத் தயாராக இருப்பவர்களை வாகனம் வைத்து அழைத்துச் சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து உதவும் திட்டத்தையும் கையில் எடுத்தோம். அதன் பிறகு, ஏன் நாமே உணவுகளை சேகரித்து ஆதரவற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நேரடியாக களம் இறங்கியுள்ளோம். தீபாவளிப் பண்டிகைக்கு 70 ஏழை, எளிய குடும்பங்களுக்கு, தேவையான அளவு மளிகைப் பொருட்கள் வழங்க வேண்டுமென்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறோம் என்றார் ராஜாசேதுமுரளி.
உணவு இல்லாதவர்களுக்கு ஒரு நேர உணவளிக்க நினைக்கிறீர்களா? தகவலை எங்களிடம் கூறுங்கள். ஒரு படி அரிசியை அதிகமாகப் போட்டு சமையுங்கள். அதைத் தேடி வந்து வாங்கிச் சென்று தேவையானவர்களிடம் சேர்க்கிறோம் என்ற வாக்குறுதியுடன் மக்களை தேடி பயணிக்கிறது இந்த ‘பசியாற சோறு’ அமைப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT