Published : 22 Nov 2020 07:09 PM
Last Updated : 22 Nov 2020 07:09 PM
2019 மக்களவைத் தேர்தலைப்போல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.
திருச்சி பாலக்கரையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (நவ. 22) செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:
"தமிழ்நாட்டில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அதை ஆமோதித்து அமித் ஷாவும் அரசியல் பேசினார். இது மரபுகளை மீறிய செயல்.
தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த துரோகங்களை மறைத்துவிட்டு, ஏராளமான நன்மைகள் செய்துள்ளதாக பேசியிருப்பதும், அதை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆமோதிப்பதுபோல் நடந்து கொண்டதும் மிக வேதனையானது.
விழாவில், வாரிசு அரசியலை பாஜக முறியடித்து வருவதாக அமைச்சர் அமித்ஷா பேசியது நகைச்சுவையாக உள்ளது. ஏனெனில், அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது மகன் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பதவியில் இருக்கிறார். இதேபோல், பாஜக-வில் வாரிசுகள் பலர் அமைச்சர்களாக, எம்எல்ஏ-க்களாக, எம்.பி-க்களாக இருந்து வருகின்றனர். பொய்யைப் பேசியே கட்சியை வளர்ப்பதே பாஜகவின் நிலை. அதை நிரூபிக்கும் வகையிலேயே அமித் ஷாவின் பேச்சும் இருந்தது.
குறிப்பாக, அமித் ஷா பேசும்போது, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளதால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால், 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் நலன்களும், உரிமைகளும் ஒவ்வொன்றாக பறிபோகும் நிலையைத்தான் பார்த்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசு காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், காவிரி படுகைக்கு அருகேயுள்ள கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சகம் 2 நாட்களுக்கு முன் அனுமதி அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தால், தமிழ்நாட்டின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் புகார் எழுந்து, அதுகுறித்து குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
இதேபோல், நீட் தேர்வை கொண்டு வந்ததுடன், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேகேதாட்டு அணை, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை என தமிழ்நாட்டுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு எதிலும் என்றும் நடந்து கொண்டதில்லை.
2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி எப்படி படுதோல்வி அடைந்ததோ, அதேபோல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும். திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெறும். தமிழ்நாட்டு மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான வழி பிறக்கும். சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டும்.
ஆளுங்கட்சி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நிலையில், சென்னையில் அரசு விழா என்ற பெயரில் பாஜக - அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற நிகழ்வில், கரோனா பரவல் தடுப்பு விதிகள் மற்றும் மரபுகள் மீறப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை மட்டும் தடுப்பதும், கைது செய்வதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். ஜனநாயக விரோத நடவடிக்கை.
7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரை மீது 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தாமதம் செய்து வருகிறார்.
பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். எனவே, அமித் ஷாவின் மாயாஜால வித்தைகள் தமிழ்நாட்டில் பலிக்காது. ஏனெனில், தமிழ்நாட்டுக்கு பாஜக - அதிமுக அரசுகள் ஏற்படுத்தியுள்ள இழப்புகளை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் அதே இடத்தில் செயல்பட வலியுறுத்தி வியாபாரிகள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தமுமுக - மமக ஆதரவு அளிக்கிறது. திருவானைக்காவல் பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் முகப்புப் பகுதியை மீண்டும் சீரமைத்துத் தருவதாக முஸ்லிம் அமைப்புகளிடம் அளித்த வாக்குறுதியை மாவட்ட நிர்வாகம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ப.உதுமான் அலி, அஷ்ரப் அலி, ராஜா முகம்மது, நூர்தீன், இப்ராகிம் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment