Published : 22 Nov 2020 07:01 PM
Last Updated : 22 Nov 2020 07:01 PM
பாஜக அரசை எதிர்த்து தேசிய அளவில் நடைபெறும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டங்களை வெற்றிபெறச் செய்வோம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (நவ. 22) வெளியிட்ட அறிக்கை:
"தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகப் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவதற்கு தொழிலாளர் அமைப்புகளும் விவசாயிகள் அமைப்புகளும் அறிவிப்புச் செய்துள்ளன. எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் இந்தியாவெங்கும் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் போராட்டங்களை வெற்றி பெறச் செய்யுமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் அறைகூவி அழைக்கிறோம்.
தொழிலாளர்களின் நீண்டகால போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட 29 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, 4 தொகுப்புகளாக பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அத்துடன், அம்பேத்கரால் உறுதிப்படுத்தப்பட்ட 8 மணி நேர வேலை என்பதை ஒழித்துக்கட்டிவிட்டு 12 மணி நேர வேலை என ஒரு கொடுங்கோல் நிலையை இந்தியாவில் அறிமுகப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.
அதுபோலவே, மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள வேளாண் துறையில் தலையிட்டு விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த சட்டங்களை எதிர்த்தும், கரோனா பெருந்தொற்றால் பரிதவிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 நிவாரணம், மாதம் 10 கிலோ அரிசி வழங்குவதோடு, 100 நாள் வேலைத் திட்ட வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவேண்டுமென்றும் கோரி எதிர்வரும் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
அதுபோலவே, 27 ஆம் தேதி டெல்லியில் முற்றுகைப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த இரண்டு அறப்போராட்டங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரிக்கிறோம். இவற்றில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்று இந்தப் போராட்டங்களை வெற்றி பெறச் செய்யுமாறு விடுதலைச் சிறுத்தைகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT