Published : 22 Nov 2020 04:54 PM
Last Updated : 22 Nov 2020 04:54 PM
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுவது குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் மழை கிடைக்கும், புயலின் தாக்கம் ஆகியவை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விரிவாக விளக்கியுள்ளார்.
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும். மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிவர் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிவர் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். இந்த புயலுக்கு நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கரை கடப்பதில் இரு விதமான வாய்ப்புகள் உள்ளன.
முதலாவது, வலுவிழந்த புயலாக மாறி, டெல்டா பகுதியில் கரையைக் கடக்கலாம். 2-வதாக, வலுவான புயலாக மாறி காரைக்கால்-சென்னை இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.
முதலாவது வாய்ப்பு
முதல் வாய்ப்பின்படி வலுவிழந்த புயலாக மாறி டெல்டா பகுதியில் வேதாரண்யம் முதல் காரைக்கால் இடையே வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் புயல் கரை கடக்கக் கூடும். இந்த முறையில் வாய்ப்பு இருந்தால் 25-ம் தேதி அன்று புயல் கரை கடக்கலாம்.
70கி.மீ வேகத்தில் காற்று
புயல் கரை கடக்கும்போது மணிக்கு சராசரியாக 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 80 வேகத்தில் காற்று இருக்கும். ஆனால், வேதாரண்யம் முதல் காரைக்கால் இடையே நிவார் புயல் நிலப்பகுதியில் கரை கடப்பதற்கு 20 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.
கனமழை
இந்த வாய்ப்பின்படி நிவர் புயல் தரைப்பகுதியில் கரை கடந்தால், திரூவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பரலூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும்.
திரூவார், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக டெல்டா முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும்.
2-வது வாய்ப்பு(வலுவான புயல்) 80% வாய்ப்பு
2-வது வாய்ப்பின்படி, வலுவான புயலாக நிவர் புயல் மாறி காைரக்கால் சென்னை இடையே கரை கடக்கவே 80 சதவீதம் வாய்ப்புள்ளது. வரும் 24 முதல் 25-ம் தேதிவரை கனமழை பெய்யும். இதில் 25-ம் தேதி அன்று புயல் கரை கடக்கும் நாளாகும்.
12 0கி.மீ வேகத்தில் காற்று
இந்த முறையில் நிவர் புயல் வலுவான புயலா மாறி கரைகடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 150கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அதீதகனமழை
இந்த வாய்ப்பின்படி, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீதகனமழை பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி, நாகை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், புதுச்சேரி விழுப்புரம் மாவட்டங்களில் அதீத கனமழையும், மணிக்கு 100கி.மீ வேகத்தில் காற்றும் வீச வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மிக கனமழை பெய்யக்கூடும்.
தென், தென் மேற்கு மாவட்டங்களுக்கு மழை இருக்குமா?
இருவிதமான புயல்களிலும் தென் மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் மழை கிடைக்கும் வாய்ப்பு குறைவு. குறிப்பாக நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை கிடைக்கும் வாய்ப்பு குறைவு
இது முதல்கட்ட கணிப்புதான் இன்னும் நாட்கள் செல்லச் செல்ல புயலின் நகர்தலில் மாற்றம் இருக்கலாம். புயல் கரையைக் கடக்கும் 24மணிநேரத்துக்கு முன்பாகவே தெளிவான பார்வை கிடைக்கும்
வடதமிழகம் நோக்கி வரக் காரணம்?
பெரும்பாலான புயல்கள் பசிபிக் கோடுகள் மூலம் நகர்த்தப்படுவதால், மேல்நோக்கித்தான் புயல் நகர்ந்து செல்லும். கீழ்நோக்கி திசைமாறிச்செல்வது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
அதாவது, அரபிக்கடல் நோக்கி கீழ்திசையில் நகர்வது அரிதானதாகும். 2018-ல் 'கஜா' புயல் அரபிக்கடல் நோக்கி நகர்ந்தது. மேல் நோக்கி புயல் நகரும்போதுதான் புயல் எளிதாக கரை கடக்கமுடியும். திசைமாறி கீழ்நோக்கி செல்லும்போது, அதிகமான அளவு புயல் வலுவடையாது. இதில் கஜா புயல் விதிவிலக்காகும்.
டெல்டா மக்களுக்கு வேண்டுகோள்
நாகை மற்றும் திரூவாரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சில செய்திகளை கேட்டு, புயலின் தாக்கத்தால் மரங்களைக் காக்கும் நோக்கில் மரத்தின் கிளைகளை வெட்டுகிறார்கள். ஆனால், 'நிவர்' புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு எந்தவிதாமான பலமான காற்றும் வீசுவதற்கு வாய்ப்பும், அச்சமும் குறைவு. ஆதலால், மரங்களை வெட்ட வேண்டாம்.
இலங்கைக்கு செல்லாத புயல்: பெயரில் ஒற்றுமை
நிவர் புயல் வங்கக்கடலில் உருவாகினாலும், இலங்கைக்குள் செல்லாமல் தமிழகக் கடற்கரைப்பகுதியில் கரை கடக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய காலகட்டத்தில் எப்போதெல்லாம் வங்கக்கடலில் உருவான புயல் இலங்கையை தொடாமல் தமிழகக் கடற்பகுதியில் கரைகடந்ததோ அந்த புயல்களின் பெயரின் ஆங்கில எழுத்து என் எனும் எழுத்தில் தொடங்கியுள்ளது.
கடந்த 2008-ல் 'நிஷா' புயல், 2012 'நீலம்' புயல் ஆகியவை இலங்கையைத் தொடாமல் தமிழகம் நோக்கி நகர்ந்தவை. அதேபோலத்தான் தற்போது நிவர் புயலும் இலங்கையைத் தொடாமல் தமிழகம் நோக்கி நகர்கிறது. இந்த புயலின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில் 'என்' எழுத்தில் தொடங்குகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இதைத் தொடர்ந்து மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இருக்கலாம் என்பதால், ஆழ்கடல் மீ்ன்பிடிப்புக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT