Published : 22 Nov 2020 02:30 PM
Last Updated : 22 Nov 2020 02:30 PM

எதேச்சதிகார தாக்குதலை முறியடித்திட தமிழகத்தில் வரும் 26-ல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்; மார்க்சிஸ்ட் அழைப்பு

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

எதேச்சதிகார தாக்குதலை முறியடித்திட தமிழகத்தில் நவம்பர் 26-ல் நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ. 22) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளி விவசாயி விரோத, தேச நலனுக்கு உலை வைக்கும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்களும், தொழில் வாரி சம்மேளனங்களும் ஒருங்கிணைந்து நவம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதேபோல், விவசாயிகளின் அமைப்புகளும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26-27, 2020 தேதிகளில் தலைநகர் டெல்லியில் பெருந்திரள் முற்றுகை கிளர்ச்சிப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

தொழிலாளர்கள், விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பேராதரவு வழங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தின் இந்த எதேச்சதிகார தாக்குதலை முறியடித்திட தமிழகத்தில் நவம்பர் 26-ல் நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டுமென தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அரசின் செல்லா நோட்டு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியைத் தொடர்ந்து, தற்போதைய திட்டமிடப்படாத ஊரடங்கும் சேர்ந்து அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிலைகுலைய வைத்தன.

கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானத்தை இழந்து நிர்கதியாகினர். குறிப்பாக, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்ல முடியாத அவதிகளுக்கு உள்ளாகினர். கோவிட் தொற்றை எதிர்கொள்வதிலும் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் கேலிக்கூத்தாகவே அமைந்தன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த பின்னணியில் நாடாளுமன்ற ஜனநாயகம், மரபுகளை குழிதோண்டி புதைத்து, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை புறந்தள்ளி, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளி, விவசாயி உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, 29 தொழிலாளர் நல சட்டங்கள், 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கப்பட்டு முதலாளி நல சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. தேசத்தின் நிதி ஆதாரமாக உள்ள பாதுகாப்புத்துறை, ரயில்வே, வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் தனியார்மயத்தில் தள்ளப்படுகின்றன.

இந்தியாவின் ஜிடிபி எதிர்மறையில் போய்க்கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. இவற்றின் விளைவாக வறுமை, வேலையின்மை உச்சத்தை தொடுகின்றன.

கிராமப்புற வேலை உறுதித் திட்டமும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவும், உணவு பாதுகாப்பை சிதைக்கவுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய நவீன தாராளமய, நாசகர கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளி, விவசாயி உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமெனவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 வீதம் நிவாரண தொகை வழங்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை ஆண்டுக்கு 200 நாளாக உயர்த்துவதோடு, நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை நிறைவேற்றி, நாளொன்றுக்கு கூலி ரூ.600 ஆக நிர்ணயித்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26, 2020 அன்று நடைபெறும் அனைத்து தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறச் செய்யும் வேண்டுமெனவும், அதே நாளில், பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஆதரவோடு தொழிலாளர்கள் / விவசாயிகள் நடத்தும் மறியல் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டுமெனவும் கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

பல்வேறு நாடுகளில் ஜனநாயக உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக நடைபெறுகிற மக்கள் போராட்டங்கள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. அதே உத்வேகத்தோடு தமிழகத்திலும் அனைத்துப் பகுதியினருக்காகவும் நடக்கும் இப்போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x