Published : 22 Nov 2020 11:23 AM
Last Updated : 22 Nov 2020 11:23 AM

அதிமுக - பாஜக கூட்டணி; நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன் விமர்சனம்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

அதிமுக - பாஜக கூட்டணிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (நவ. 22) வெளியிட்ட அறிக்கை:

"நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதல்வர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி.

தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளிலெல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியைத் தர மறுப்பது; தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது எனத் தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது.

இந்நிலையில், பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் போட்டிப் போட்டுக்கொண்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதிமுகவை பாஜகவுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்த துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் இதை மனமார ஏற்க மாட்டார்கள்.

தமிழ் நாட்டு நலனை அடகு வைத்தது மட்டுமின்றி, இப்போது தங்களது கட்சியையும் பாஜகவுக்கு அடகு வைத்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக மக்கள் இந்தத் துரோகச் செயலுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x