Last Updated : 02 Oct, 2015 02:48 PM

 

Published : 02 Oct 2015 02:48 PM
Last Updated : 02 Oct 2015 02:48 PM

தொடர் மழையால் நீர் வரத்து அதிகரிப்பு: ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி பாதிக்கும் அபாயம்

தொடர் மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தூர்வாரும் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அணையில் இருந்து மேற்கே 5.1 கி.மீ. தொலைவுக்கு தூர்வார முடிவு செய்யப்பட்டு, 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தூர்வார டெண்டர் விடப்பட்டன. இதில் 2-வது மற்றும் 3-வது பிரிவில் தூர்வாரும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் அணையை ஒட்டிய முதல் பிரிவில், முதலில் தூர்வார வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி மேம்பாட்டுக் குழு சார்பில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக முதல் பிரிவில் கடந்த 28-ம் தேதி முதல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

பணிகள் மந்தம்

அதேநேரத்தில் 2-வது மற்றும் 3-வது பிரிவில் நடைபெறும் அளவுக்கு முதல் பிரிவில் பணிகள் வேகமாக நடைபெறவில்லை. 2 படகுகள் மூலம் மணல் உறிஞ்சி எடுக்கப்பட்டு ஒரே ஒரு ஜேசிபி இந்திரத்தின் உதவியால் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், 2-வது மற்றும் 3-வது பகுதியில் சுமார் 30 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் வேக, வேகமாக எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

மழையால் பாதிப்பு

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் வைகுண்டம் அணை பகுதிக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் முதல் பிரிவில் தூர்வாரும் பணி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் மட்டுமே குறி

இது குறித்து தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் சி.நயினார் குலசேகரன் கூறியதாவது:

அணையின் முதல் பிரிவில் இருந்து முழுமையாக தூர்வாராமல் மணலை மட்டும் குறிவைத்து தூர்வாரப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, தூர்வாரும் பணி குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அணையை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க நல்லகண்ணு மற்றும் என்னையும் சேர்த்து 5 பேர் கொண்ட குழுவினை செப்டம்பர் 10-ம் தேதி பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. இதை உறுதிப்படுத்தி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எனக்கு செப்டம்பர் 14-ம் தேதி தகவல் அளித்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 16-ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, கண்காணிப்பு குழுவால் பணி தடைபடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்ததால் கண்காணிப்பு குழுவை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பொதுப்பணித்துறையினரை கண்டித்து கடந்த 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

போராட முடிவு

மழைக்காலத்துக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை முடித்திடும் வகையில் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்த ஆலோசித்து வருகிறோம்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x