Published : 07 May 2014 06:59 PM
Last Updated : 07 May 2014 06:59 PM
தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் 10 பேரை சிறையில் அடைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அகதிகளின் குழந்தைகளை சிறைக்குள் அனுமதிக்க புழல் சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆம் தேதி இலங்கை முல்லைத் தீவு மற்றும் கண்டியிலிருந்து 3 குழந்தைகள், 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கொண்ட இரண்டு குடும்பங்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அகதிகளாக வந்தடைந்தனர்.
காவல்துறையினரின் விசாரணைக்கு பின் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் குழந்தைகள் தவிர்த்து மற்ற 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அகதிகளை விசாரித்த நீதிபதி, மே 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கைதான 2 சிறுவர்கள், தயாபரராஜன் என்பவரது மகன் டியோரன் (9), கணேஷ் சுதாகர் என்பவரது மகள் நிலக்ஷனா (12) மற்றும் 3 குழந்தைகள் உள்பட 10 பேரையும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் டியோரன் (9), நிலக்ஷனா (12) ஆகிய இருவரும் சிறுவர்களாக இருப்பதால் சிறைக்குள் அனுமதிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மற்ற மூன்று குழந்தைகளை அவர்களின் தாயாருடன் இருக்க அனுமதித்தனர். இதனையடுத்து இரண்டு குழந்தைகளையும் காவல்துறையினர் ராமேஸ்வரத்திற்கு திரும்பவும் புதன்கிழமை அழைத்து வந்தனர்.
தற்போது காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர்களின் உறவினர்களால் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT