Published : 21 Nov 2020 07:44 PM
Last Updated : 21 Nov 2020 07:44 PM
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதி தரக்கோரி மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பத்து சதவீத உள் ஒதுக்கீடு தருவதற்கான கோப்பினைப் புதுச்சேரி அரசு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பியது. அக்கோப்பினை அவர் மத்திய உள்துறைக்கு அனுப்பி விட்டார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டெல்லி சென்று இக்கோப்புக்கு அனுமதி தருவது தொடர்பாக மத்திய அமைச்சர்களைச் சந்தித்துத் திரும்பினார். இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்த்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாகப் பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறும்போது, "புதுச்சேரி மாநில அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து புதுச்சேரி பாஜக சார்பில் நேரடியாக வலியுறுத்தினோம்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழை எளிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களே ஆவர். தனியாகச் சிறப்புப் பயிற்சி பெறக் கட்டணம் செலுத்தி இவர்களால் படிக்க முடிவது இல்லை.
மருத்துவப் படிப்பிலும், நீட் நுழைவுத் தேர்விலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடிதம் மூலம் மத்திய உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்களுக்குக் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை தெரிவித்துள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT