Published : 13 May 2014 10:11 AM
Last Updated : 13 May 2014 10:11 AM
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, 7 புதிய திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக மின் துறை திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தப் பணிகளை தீவிரப்படுத்த மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8,500 மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மின் தேவை மற்றும் இருப்பு விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதற்கான விவரங்களை மத்திய மின்சார ஆணையம், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி, கருத்துகள் மற்றும் திட்டமிடல் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தர விட்டுள்ளது.
இந்நிலையில், மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக மின் துறை எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பது குறித்து மின்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 7 வகையான புதிய மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
சென்னை எண்ணூரில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 420 மெகாவாட் மின் நிலையத்தை மாற்றிவிட்டு, அதில் 660 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையம் அமைக்கவும், அதே வளாகத்தில் தலா 660 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள் கொண்ட மற்றொரு புதிய மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள், சுமார் 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, 660 மெகாவாட் திறனில் கூடுதலாக மேலும் ஒரு மின் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வடசென்னை நிலையம் அருகில் 800 மெகாவாட் திறனில் மூன்றாம் நிலை மின் நிலையம், ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் உப்பூரில் தலா 800 மெகாவாட் திறனில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய நிலையம் ரூ.9,600 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, நீலகிரி மலைப் பகுதியில் 500 மெகாவாட் திறனில் குந்தா நீரேற்று மின் நிலையமும், சில்லஹெல்லா என்ற பகுதியில் 2,000 மெகாவாட் திறனில் மற்றொரு நீரேற்று நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து வருகின்றன.
மரபுசாரா எரிசக்தியைப் பொறுத்தவரை, 2020ம் ஆண்டுக்குள் 3,000 மெகாவாட் திறனில் சூரியசக்தி பூங்காக்களும், சூரிய சக்தி அமைப்புகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம் அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டாம் அலகிலிருந்து 460 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். எனவே, 2020-ம் ஆண்டுக்குள் எந்தவிதமான மின்சார தட்டுப்பாடும் ஏற்படாமல் இருப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வந்ததும் புதிய மின் திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT