Published : 21 Nov 2020 11:29 AM
Last Updated : 21 Nov 2020 11:29 AM

ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை; தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்ததற்காக, தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் கணினி, கைபேசி மூலம் ரம்மி விளையாடுவது அதிகரித்து வந்தது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்ட நிலையில், ஒரு சிலர் கடன் வாங்கி ரம்மி விளையாடி இழந்ததால், உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறின. இதில், சூதாட்டத்தை ஒடுக்கும் காவல் துறையினரும் பணத்தை இழந்து அதன்பின் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு நேற்று (நவ. 20) பிறப்பித்தது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 21) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கடந்த சில மாதங்களில் பலபேர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்தது. இதனால் பல நடுத்தர குடும்பத்தினர் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையால் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் லாட்டரி சீட் வாங்கி பணத்தை இழந்தனர்.

இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை உணர்ந்த தமிழக அரசு அவற்றுக்குத் தடை செய்தது. அதே போல், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து அவரச சட்டம் கொண்டு வந்த தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x