Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

மருத்துவரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: திமுக எம்எல்ஏ பூங்கோதை ட்விட்டரில் வேண்டுகோள்

திருநெல்வேலி / சென்னை

‘எனது உடல்நலக் குறைவு குறித்து தவறான வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள கழகத்துக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம்’ என்று திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசி அருகே திருமலையப்பபுரத்தில் 18-ம் தேதி நடந்ததிமுக கூட்டத்தில் பூங்கோதை தரையில் அமர்ந்து, நிர்வாகிகளின் காலில் விழுவது போன்று சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. மறுநாள் (19-ம் தேதி) காலை மயங்கிய நிலையில் திருநெல்வேலி சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் பூங்கோதை அனுமதிக்கப்பட்டார்.

உட்கட்சி விவகாரத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. திமுக வட்டாரங்கள் அதை மறுத்திருந்தன.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட பூங்கோதை, அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பூங்கோதை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 19-ம் தேதி காலை 6 மணியளவில் ஆலங்குளத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தேன். என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்த பரிசோதனையில் என் உடலில் ரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு, மூளை, நெஞ்சு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டதுபோல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான திமுக. ஆகவே எனக்கு மருத்துவரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைபரப்பி, என்னை வளர்த்துள்ள கழகத்துக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம். ஊடகங்கள் கற்பனைசெய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x