Published : 20 Nov 2020 05:09 PM
Last Updated : 20 Nov 2020 05:09 PM
தமிழக அரசின் 7.5 உள்ஒதுக்கீட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்து அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் முன்வர வேண்டும் என உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தைக் குறைக்க உத்தரவிடக்கோரி நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், நடப்பாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் 86 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இவர்களின் குடும்பப் பொருளதார சூழ்நிலையால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் விடும் சூழல் உள்ளது.
எனவே, அரசின் உள் ஒதுக்கீட்டு சலுகையால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியில் விடுவதைத் தவிர்க்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெற்ற ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை சினிமாப் பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முன்வர வேண்டும் என்றனர்.
பின்னர் மனு தொடர்பாக சுயநிதி கல்லூரிகள் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 27-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT