Published : 20 Nov 2020 03:19 PM
Last Updated : 20 Nov 2020 03:19 PM
லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி லடாக்கில் வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து திமுக சார்பில் நிதியுதவி அளித்தார்.
முதல்வர் பழனிசாமி இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி:
“காஷ்மீர், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி நவ.18 அன்று எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
“ராணுவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி, லடாக் பகுதியில் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமிக்கு வீரவணக்கம். தியாக வீரரைத் தந்த குடும்பத்தாருக்கு என் ஆறுதல்”.
இராணுவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி, லடாக் பகுதியில் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம்.
தியாக வீரரைத் தந்த குடும்பத்தாருக்கு என் ஆறுதல்! pic.twitter.com/ylAYtVKbXw
இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கோவில்பட்டியில் உள்ள கருப்பசாமி வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:
“காஷ்மீர் லடாக் பகுதியில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி நேற்று நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினேன்”.
காஷ்மீர் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி அவர்கள் நேற்று நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின்
குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு 1/2 pic.twitter.com/fz52qUvkV6— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 20, 2020
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT