Published : 20 Nov 2020 01:19 PM
Last Updated : 20 Nov 2020 01:19 PM

தமிழக எம்.பி.க்களின் கடிதங்களுக்கு இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பும் மத்திய அமைச்சகங்கள்; மொழியாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது: ஸ்டாலின் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்குப் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது, மொழியாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு, ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்கள், இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவதாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 20), தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அது தொடர்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற மொழியாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர், தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்துக் கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் அதையும் விடாமல் பிடித்துக்கொண்டு, இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பாஜக அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய பாஜக அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x