Published : 20 Nov 2020 01:13 PM
Last Updated : 20 Nov 2020 01:13 PM
“விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறது. ஸ்டாலின் தூதுவர்களாக கட்சியின் முன்னணித் தலைவர்கள் 15 பேர், மூன்று கட்டங்களாக 75 நாட்கள், 1500 பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வை நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''திமுக தலைவர் ஸ்டாலினின் செய்தியைத் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் 75 நாட்கள், கட்சி முன்னணியினர் 15 பேர், 1,500 கூட்டங்கள், 15,000 கி.மீ., 234 தொகுதிகள், 500 + உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் + நேரடிக் கலந்துரையாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்னும் பிரச்சாரத்தைத் திமுக, நவம்பர் 20 அன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவித்துள்ளது.
இப்பிரச்சாரத்தின் வழியாக, திமுகவின் கட்சி முன்னணியினர் 15 பேர், திமுக தலைவர் ஸ்டாலினின் தூதுவர்களாகத் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் பயணித்து மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர்.
இந்தப் பிரச்சாரப் பயணத்தின் நோக்கம்:
1. அதிமுக அரசாங்கத்தின் கடந்த 10 ஆண்டு கால முறையற்ற நிர்வாகம் குறித்து மக்களிடம் சுட்டிக்காட்டுவதுடன் அவர்களின் குறைகளையும் துன்பங்களையும் பற்றி நேரடியாகக் கேட்டறிவது.
2. அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் அரசின் மீதான மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் திமுகவின் உயர்மட்டத் தலைவர்கள் கேட்டறிவது.
இச்செயல்பாட்டின்போது, “ஆளும் அதிமுக அரசின் அட்டூழியங்களையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் நிராகரித்து, புதிய விடியலை நோக்கி நடைபோடுவோம்” என்னும் கட்சித் தலைவரின் முழக்கத்தை மக்களிடம் இத்தலைவர்கள் எதிரொலிப்பர்.
இப்பிரச்சாரத்தை அறிவித்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறுகையில், “மோசமான நிர்வாகம், ஒன்றிய அரசின் காலில் மண்டியிட்டு மாநில உரிமைகளைத் தாரைவார்த்தது, கரோனா பேரிடர் காலத்திலும் ஊழலிலே கவனம் செலுத்தி மக்களின் உயிரைப் பறித்தது, முன்யோசனையோ கலந்தாலோசனைகளோ இன்றி அறிவிப்புகளை வெளியிடுவதும் - பின்பு அதைத் திரும்பப் பெறுவதுமாக என பல்டி அரசாகச் செயல்படுவது போன்ற அதிமுக அரசின் அலங்கோலங்களால் கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழக மக்கள் எண்ணிலடங்கா இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழக மக்களுடன் ஒன்றிணைந்து வளர்ச்சியை நோக்கி திமுக பணியாற்றும். தமிழகம் இழந்த நல்லாட்சியை மீண்டும் நிலைநிறுத்தும். அதற்கான தொடக்கமாக இப்பிரச்சாரம் அமையும்.
‘பல்லாயிரக்கணக்கான மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடம் இந்த அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பெரும் பொறுப்பினைத் தலைவர் ஸ்டாலின் இத்தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார்” என்றார்.
இந்தப் பிரச்சாரம் இன்று (20.11.2020) மதியம் 2 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது.
இப்பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்கும் திமுக முன்னணியினர் பட்டியல்:
முதற்கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள்
1. உதயநிதி ஸ்டாலின், 2.கனிமொழி, 3. திருச்சி சிவா, 4.திண்டுக்கல் லியோனி 5. முனைவர் சபாபதி மோகன்
இரண்டாம் கட்டமாக, டிசம்பர் 2ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்
1.ஐ.பெரியசாமி, 2.க.பொன்முடி, 3.சுப்புலட்சுமி ஜெகதீசன், 4. அந்தியூர் செல்வராஜ், 5.ராஜ கண்ணப்பன்.
மூன்றாம் கட்டமாக டிசம்பர் 11ஆம் நாள் முதல் மாநிலம் தழுவிய பயணம் மேற்கொள்ளவுள்ள தலைவர்கள்
1.ஏ.கே.எஸ்.விஜயன், 2.தமிழச்சி தங்கபாண்டியன், 3.எஸ்.ஆர்.பார்த்திபன், 4.எஸ்.செந்தில்குமார், 5.கார்த்திகேய சிவசேனாபதி''.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT