Last Updated : 20 Nov, 2020 01:00 PM

 

Published : 20 Nov 2020 01:00 PM
Last Updated : 20 Nov 2020 01:00 PM

புதுச்சேரியில் புதிதாக 54 பேருக்குக் கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 621 ஆகக் குறைந்தது

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 54 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு எதுவும் இல்லை. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 621 ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (நவ. 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,468 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில்-43, காரைக்காலில்-2, மாஹேவில்-9 என மொத்தம் 54 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

மேலும் உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகக் குறைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 248 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 621 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 355 (96.64 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 826 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 32 ஆயிரத்து 979 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

தற்போது சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரிக்கிறது. குறிப்பாக, டெல்லியில் தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனர். சிலர் மட்டும்தான் முகக்கவசம் அணிவதில்லை, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் இல்லை.

அடுத்த 2 மாதங்களில் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் வருகின்றன. ஆகையால், சுகாதாரத் துறையினர் சிறப்பாகப் பணிபுரிகின்றனர். கரோனா தொற்று குறைந்துள்ளது எனக் கருதி பொதுமக்கள் சாதாரணமாக இருந்துவிடக்கூடாது. விழிப்போடு இருக்க வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x