Published : 20 Nov 2020 12:33 PM
Last Updated : 20 Nov 2020 12:33 PM
ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியதை தமிழ்நாடு அரசு எதிர்க்காமல் வாய் மூடி மௌனம் காத்து வருகின்றது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 20) வெளியிட்ட அறிக்கை:
"நவதாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் மத்திய பாஜக அரசு, இயற்கை வளங்களைப் பெருவணிகக் குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்குப் பலியிட்டு வருகின்றது.
கரோனா நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கும் முன்பு வேதாந்தா, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளிலும், ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வரும் மீனவர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிபோகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு குறிப்பாக கடலோர மாவட்டங்களுக்கும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கும் ஏற்படும் பாதிப்பை எடுத்துக் கூறி பாஜக மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும், சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் உரிமம் வழங்க கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியதை தமிழ்நாடு அரசு எதிர்க்காமல் வாய் மூடி மௌனம் காத்து வருகின்றது.
தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஹைட்ரோகார்பன் எடுக்க வழங்கியுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்து, அத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இது தொடர்பாக அதிமுக மாநில அரசும், முதல்வர் உள்ளிட்ட கடலோர மாவட்ட அமைச்சர்களும் மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்து திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT