Published : 20 Nov 2020 11:58 AM
Last Updated : 20 Nov 2020 11:58 AM
அமித் ஷாவைக் கண்டு அதிமுக அமைச்சர்களே பயப்படுவதில்லை. திமுக ஏன் பயப்பட வேண்டும் என, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று (நவ. 20) சென்னை, அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜன. 5 முதல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையைப் பார்த்து திமுக பயப்படுகிறதா?
அவர் வருகையைப் பார்த்து அதிமுக அமைச்சர்களே பயப்படவில்லை. நாங்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?
தடையை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துகிறதே? ஏன் திமுக இதுகுறித்து கருத்து சொல்லவில்லை?
எதற்கு நாங்கள் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும்? எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, திருச்செந்தூரில் வேல் காணவில்லை என்று சொன்னபோது தலைவர் கருணாநிதி 110 கி.மீ. நடந்தே வேலை கண்டுபிடிக்கச் சென்றார். இப்போது பாஜக தங்கள் கட்சியை வளர்க்கப் புதிதாக வேல் யாத்திரை ஒன்றை நடத்துகிறார்கள். தடை என்று சொல்லியும் அனுமதிப்பது தமிழக அரசு. மத்திய அரசுக்கு பயந்துகொண்டு தமிழக அரசு இப்படிச் செய்கிறது.
காங்கிரஸ் - திமுக உறவு எப்படி இருக்கிறது?
எங்களுக்குள் உறவு நன்றாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல எந்தக் கலகத்தையும் எங்களுக்குள் ஏற்படுத்திவிட முடியாது. தொகுதிகள் என்பது திமுக தலைவர் முடிவெடுக்க வேண்டியது. காங்கிரஸ் தலைமையிடம் கலந்து முடிவெடுக்கப்படும்.
தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்படுகிறதே?
தேர்தல் என்றால் இதெல்லாம் இருக்கும். மக்களிடம் சென்று நாங்கள் வெற்றி பெறுவோம்.
தேர்தலுக்கு வெகு நாட்கள் முன்பாகவே பிரச்சாரத்தைத் தொடங்குவதால் மக்கள் மனதில் பதியுமா?
நிச்சயமாகப் பதியும். தேர்தல் நேரத்தில் செல்லாமல் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். முன்னதாகவே 15 ஆயிரம் கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியதன் விளைவு, மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது.
வி.பி.துரைசாமி - கு.க.செல்வம் திமுகவிலிருந்து சென்றதால் அதன் தாக்கம் இருக்கிறதா?
வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் ஆகியோருக்குப் பதவி கொடுத்தும் வேறு எதையோ பெரியதாக எதிர்பார்த்துச் சென்றனர். அதற்கு என்ன செய்ய முடியும்?
இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT