Published : 20 Nov 2020 10:07 AM
Last Updated : 20 Nov 2020 10:07 AM
காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் வீரமரணமடைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாயக் பதவி வகித்து வந்தார்.
காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி அங்கு நடந்த சாலை விபத்தில் வீரமரணமடைந்தார். இதுகுறித்த தகவல் ராணுவத்தில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரரின் மறைவுச் செய்தி குறித்த தகவல் அறிந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள கருப்பசாமியின் வீட்டுக்கு வந்தார்.
அங்கு அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருப்பசாமியின் பெற்றோர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தனது உயிரை துச்சமென நினைத்து பணியாற்றச் சென்ற இடத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் இவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறோம். கருப்பசாமியின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்ளும்" என்றார்.
கருப்பசாமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும் கனிமொழி எம்பி வழங்கினார்.
அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், நகர திமுக செயலாளர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT