Published : 20 Nov 2020 10:00 AM
Last Updated : 20 Nov 2020 10:00 AM

மாமல்லபுரம் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

மாமல்லபுரம் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 20) வெளியிட்ட அறிக்கை:

"உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களின் துன்பங்களை மறந்து இன்பங்களை வரவு வைத்துச் சென்று கொண்டு இருந்தனர்.

2020, மார்ச் மாதம் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் கிருமி மனிதகுலத்தின் மீது நடத்திக் கொண்டு இருக்கும் உயிரியல் யுத்தத்தின் காரணமாக அணு ஆயுத வல்லரசு நாடுகளே தங்களின் குடிமக்களைக் கரோனா பலி பீடத்தில் இழந்துள்ள நிலையில் இந்தியா அதில் விதிவிலக்காக இருக்க முடியாது.

உலக நாடுகள் தத்தம் குடிமக்களைப் பாதுகாத்துக்கொள்ள பொது ஊரடங்கு, தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மூலம் கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. சர்வதேச விமானங்கள் இயக்கப்படாத நிலையில், அந்நியச் செலவாணிகள் ஈட்டித்தரும் சுற்றுலாத் தொழில் முழுவதுமாக முடங்கி, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாவை நம்பி இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள், நூறு சதவீதம் மாற்றுத் தொழில் ஏதும் இல்லாததால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விதியை நொந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு வருகின்றார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள், பொதுப் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் கரோனா கொடுமையை மறந்து இன்பத்தை வரவு வைக்க சுற்றுலா செல்லத் தொடங்கி 'கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்கோன் கண்ட மல்லை பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்று இல்லை' என்ற பாடல் வரிக்கு இலக்கணமாகத் திகழும் பல்லவர் காலச் சிற்பங்களையும், அழகிய கடற்கரையையும் பார்க்க மாமல்லபுரம் வருகின்றார்கள்.

உள்ளரங்கில் இயங்கும் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள், மது பார்கள், அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்கள் போன்று இல்லாமல் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் திறந்தவெளியில்தான் உள்ளன. ஆனால், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புரதான சின்னங்களைச் சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியாமல் பூட்டப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

கரோனா பரவலுக்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்பதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்பங்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கவும், சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் இழந்து வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களின் நலன் கருதியும் மத்திய, மாநில அரசுகள் மேலும் கால நீட்டிப்பு செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட அன்புடன் வேண்டுகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x