Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

காட்பாடி அருகே வீட்டைவிட்டு விரட்டியதால் 3 மகன்களுக்கு தானமாக எழுதிய சொத்துக்கள் தந்தையிடம் ஒப்படைப்பு: வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் பொன்னையில் முதியவர் ரேணுகோபல் பெயரில் சொத்துக்கள் மாற்றப்பட்ட ஆணையை வழங்கிய வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

காட்பாடி அருகே பொன்னை கிராமத்தில் தந்தையிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்களை தானமாக எழுதி வாங்கிய மூன்று மகன்கள், அவரை பராமரிக்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து, மகன்கள் பெயரில் எழுதப்பட்ட தான சொத்துக்களின் பத்திரப்பதிவை ரத்து செய்து மீண்டும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை கிராமத்தில் வசிப்பவர் ரேணுகோபால் (82). அரிசி ஆலை உரிமையாளர். இவரது மனைவி கோமளேஸ்வரி. இவர்களுக்கு ரூபசுந்தரி, மலர்விழி, லலிதா என்ற மகள்களும், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் என்ற மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு கோமளேஸ்வரி இறந்ததால் மகன்கள் பராமரிப்பில் ரேணுகோபால் இருந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு மகன்கள் மூன்று பேருக்கும் தனக்குச் செந்தமான 13.5 சென்ட் நிலத்தில் உள்ள வீடு, காலி இடம் மற்றும் அரிசி ஆலையை பங்கிட்டு தானமாக எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு மகன்களால் கைவிடப்பட்ட ரேணுகோபால் கடந்த ஆண்டு மகன்களால் விரட்டப்பட்டுள்ளார். இதையடுத்து, மகள்கள் பராமரிப்பில் இருந்த ரேணுகோபால் தனது மகன்கள் கைவிட்டதால் அவர்களுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களின் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் மனுவை அளித்தார். இதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

அதன்பேரில், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ் ரேணுகோபால், தானமாக தனது 3 மகன்களுக்கு எழுதிக்கொடுத்த அனைத்து சொத்துக்களின் பத்திரப்பதிவையும் ரத்து செய்து, மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே மாற்றி வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான பத்திரங்களையும் ரேணுகோபாலிடம் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் நேற்று ஒப்படைத்தார். இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கணக்கிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x