Published : 19 Nov 2020 06:04 PM
Last Updated : 19 Nov 2020 06:04 PM
திருநெல்வேலியில் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் பெய்துவரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பாளையங்கோட்டை அண்ணாநகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஹைகிரவுண்ட், சீனிவாசநகர் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் அண்ணாநகர் பகுதிகளில் உள்ள ஓடைகள் வழியாக பாளையங்கோட்டை வெட்டுவான் குளத்துக்கு சென்றுசேரும்.
ஆனால் இப்பகுதியிலுள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழைநீர் வழிந்தோடாமல் இப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளன. தாழ்வான பகுதி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.
இது குறித்து தெரியவந்ததும் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்குவந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஓடைகளை தூர்வாரி தண்ணீர் வழிந்தோட வழிசெய்தனர்.
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் திருவள்ளுவர் தெரு, ஆசாத் தெரு, திருமலை தெரு, வஉசி தெரு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. மழை நீரோடு, கழிவு நீரும் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதியுற்றனர்.
அப்பகுதியில் கழிவுநீர் செல்லும் ஓடையை மறித்து வீடுகள் கட்டியிருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வழிந்தோட செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பாளையங்கோட்டை சாந்திநகர்- சீவலப்பேரி சாலையில் தரைப்பாலத்தின் அடியில் கழிவுநீர் செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் வழியாக வெள்ளம் செல்லமுடியாமல் சாந்திநகரில் 1-வது மெயின் ரோடு, 3,4,5,6-வது தெருக்களில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதுபோல் எம்.ஜி.ஆர். நகர், இந்திராநகர் பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடிக்கிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்திருந்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலையில் 117.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4184 தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 321 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று காலையில் 121.90 அடியாக இருந்தது.
சேர்வலாறு நீர்மட்டம் 135.69 அடியிலிருந்து 140.68 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம்89.50 அடியிலிருந்து 2 அடி உயர்ந்து 91.60 அடியாக இருந்தது. வடக்குபச்சையாறு நீர்மட்டம் 15 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 9.97 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 36.50 அடியாகவும் இருந்தது.
தொடர் மழையால் சேர்வலாறு அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறபகுதிகளிலும் இன்று காலை 8 மணிநிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 21, மணிமுத்தாறு- 4, சேர்வலாறு- 9, அம்பாசமுத்திரம்- 15.4, சேரன்மகாதேவி- 11, ராதாபுரம்- 30, நாங்குநேரி- 20, நம்பியாறு- 25, களக்காடு- 14.2, மூலைக்கரைப்பட்டி- 30, பாளையங்கோட்டை- 72, திருநெல்வேலி- 15.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT