Published : 19 Nov 2020 02:35 PM
Last Updated : 19 Nov 2020 02:35 PM
சிதம்பரம் அருகே தொடங்கப்படும் சைமாவின் சாயக்கழிவு ஆலைப் பணிகளை நிறுத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ. 19) வெளியிட்ட அறிக்கை:
"காவிரிப் படுகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (SIMA- Southern India Mills Association) என்ற பெயரில் இயங்கிவரும் தொழிலதிபர்களுக்கு சுமார் 450 ஏக்கர் விளைநிலம் '99 ஆண்டு குத்தகை' அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2004 - 2005ஆம் ஆண்டு அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இயற்கை வளங்களை அழிக்கும் இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் விவசாயிகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தச் சுத்திகரிப்பு ஆலைப் பணிகளுக்காக இப்பகுதியிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து வருவதற்காக ராட்சதக் குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என்பதோடு, பல வகைகளில் இப்பகுதி மக்களுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
இப்பகுதியில் உள்ள பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, வாண்டியாம்பாளையம், தச்சம்பாளையம், கோபாலபுரம், காயல்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம், வில்லியநல்லூர், புத்திரவெளி, தாழஞ்சாவடி, சான்றோர்மேடு, சிலம்பிமங்கலம், சின்னாண்டிக்குழி, புதுச்சத்திரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதோடு மீன்வளம் முற்றிலும் அழிந்து, அதை நம்பியுள்ள சாமியார்பேட்டை, குமராப்பேட்டை, மடவாப்பள்ளம், அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை, ஐயம்பேட்டை, பேட்டோடை உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
இந்த நிறுவனம் அமைக்கப்படுமானால் நிலம் உவர்ப்பாக மாறுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இப்பகுதி மக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, தொடர்ச்சியாகவும் பலகட்டப் போராட்டங்களையும் நடத்தினர்.
அப்போதைய சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்ற வகையில் மக்களோடு நானும் இப்போராட்டங்களில் பங்கேற்றபோது, பேச்சுவார்த்தைகளின் மூலம் இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாயக்கழிவு ஆலைக்கான பணிகள் தற்போது உள்ளாட்சி அமைப்பின் எதிர்ப்பையும் மீறியும், பொதுமக்கள் கருத்தைக் கேட்காமலும் திடீரென தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஆலை அமைப்பதால் ஏற்பட உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் மாசு பாதிப்பு சீர்கேடுகள் குறித்த ஆய்வுகளும் (EIA) மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், சிப்காட் வளாகத்தில் செயல்படும் ஆலைகள், ஆழ்துளைக் கிணறுகளைத் தன்னிச்சையாக அமைக்கக்கூடாது எனும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரால் 02.07.2010 வெளியிடப்பட்ட வழிகாட்டுதலையும், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்ட விதிகளின்படி இத்தகைய ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதும், சாயக்கழிவுகளைக் கடலில் கலக்கச் செய்வதும் சட்டப்படி குற்றமாகும் எனும் நடைமுறைகள் அனைத்தும் மீறப்படுகின்றன.
எனவே, இயற்கை வளங்களைப் பெருமளவு அழிப்பதோடு, மீனவர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் நடைபெறும் இந்த சாயக்கழிவு ஆலை அமைக்கும் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு சார்பில் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT