Last Updated : 19 Nov, 2020 01:51 PM

 

Published : 19 Nov 2020 01:51 PM
Last Updated : 19 Nov 2020 01:51 PM

திருமலைராயன்பட்டினம் புறவழிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது; காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தகவல்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் புறவழிச்சாலை.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் புறவழிச்சாலை சீரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து திருமலைராயன்பட்டினம் புறவழிச்சாலை அமைந்துள்ளது. சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ள இந்தச் சாலையில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது.

அண்மைக்காலமாக இந்தச் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டும், சாலை உள்வாங்கியும் மிகவும் சிதிலமைடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் அருகில் வந்த பின்னர்தான் பள்ளங்களை உணரக்கூடிய நிலையும் உள்ளது. இதனால் இருசக்கர வாகனம், கனரக வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

இது தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இன்று (நவ.19) நேரில் சென்று சாலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் புறவழிச் சாலையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் உள்ளிட்டோர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சாலை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. சாலையில் அதிக அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மேலும் சாலை சீர்கெடும் வாய்ப்புள்ளது. பழுதடைந்துள்ள இந்தச் சாலையில் பயணிக்கும்போது விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது.

அதனால் உடனடியாகச் சாலையைச் சீரமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரையில் தற்காலிகமாக இந்தச் சாலையில் போக்குவரத்தை நிறுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். அதுவரையில் இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த இயலாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x