Published : 19 Nov 2020 10:32 AM
Last Updated : 19 Nov 2020 10:32 AM
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி நேற்று (நவ.18) மாஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 79. கரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ் கற்பித்து வந்தார். 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார். இதழியல், வெளியுறவு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அவரிடம் ஆர்வமாகத் தமிழ் கற்றனர்.
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள் தொன்மங்கள் குறித்து அவர் 2000-ல் வெளியிட்ட 'ரிச்சுவல் அண்டு மித்தாலஜிக்கல் சோர்ஸஸ் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி' என்ற புத்தகம் தமிழுக்கு அவரது முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று.
கடந்த பல ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்திவந்தார்.
துப்யான்ஸ்கியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 19) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
"செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
பொன்னியும் வைகையும் பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை, இலக்கியத்தினை, வரலாற்றினை, வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் துப்யான்ஸ்கி.
சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்துபோன நிலையில், துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்.
அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, புதிய பார்வையுடன் பல கட்டுரைகளை வழங்கிய துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் மொழியை அறிந்துகொண்ட மேல்நாட்டவர் ஏராளம்.
2010-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர்.
துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திமுக தலைவர் என்ற முறையிலும் கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT