Published : 19 Nov 2020 09:48 AM
Last Updated : 19 Nov 2020 09:48 AM
தற்போது ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் ஈடுபட்டு தங்கள் பொருளையும் உயிரையும் இழப்பது அதிகரித்து வரும் நிலையில் யாரும் அவற்றில் ஈடுபட வேண்டாம் என்று, நாகை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறை சார்பில் அவர் நேற்று (நவ. 18) பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
"மதுவும், சூதும் மனிதர்களை அடிமையாக்கும் இயல்புடையவை. ஆரம்பத்தில் எளிதான விளையாட்டுகளையும், ஊக்கத்தொகையையும் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், சில ஆட்டங்களுக்குப் பிறகு, பயனாளர்களை முழுவதுமாகத் தன்வசப்படுத்துகின்றன.
சூதாட்டத்தில் ஒரேயொரு முறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுமாறு தூண்டுதலும், மன மயக்கமும் ஏற்படும். ஒரு வெற்றிக்குப் பிறகு, பலமுறை தோல்வி கண்டு பணத்தை இழந்தாலும், அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையும், மீண்டும் ஒரேயொரு வெற்றியையாவது பெற்றுவிட மாட்டோமா என்கிற நப்பாசையும் கொண்டு பெரும்பாலானோர் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையானோரின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டுமல்ல, அதில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதனால் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் அடிமையாக வேண்டாம். இதுவரை சூதாட்டங்களில் ஈடுபட்டிருப்போர் இனிவரும் காலங்களில் அதனை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்".
இவ்வாறு ஓம் பிரகாஷ் மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT