Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
சென்னை புறநகரான காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் ஒன்றோடொன்று கால்வாய்களாலும் வாய்க்கால்களாலும் பிணைக்கப்பட்டுஇருந்தன. அதனால் முன்பு மாவட்டத்தின் நீராதாரங்கள் சிறப்பாக இருந்தன. தற்போது நீர்வரத்து, நீர்ப்போக்கு மற்றும் இணைப்புக் கால்வாய்கள் குடியிருப்புகளாக ஆக்கிரமிக்கப்பட்டதால், இந்த மாவட்டமும் சென்னையும் தண்ணீருக்கு தவித்துப் போனது.
இந்நிலையில் சென்னை புறநகரில் உள்ள இணைப்பு இல்லாத ஏரிகளை ரூ.560 கோடி மதிப்பீட்டில் பாதாள மூடுகால்வாய் மூலம் இணைக்கும் திட்டத்தை பொதுப்பணித் துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் பெருமழையால் சென்னை மற்றும் புறநகர்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போயும், ஏரிக்கு நீர் செல்லும் வழித்தடங்கள் அழிந்து போயும், சில நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும் இருந்ததால், பெருமழையால் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
இந்நிலையில் விழித்துக்கொண்ட அரசு நீர்நிலைகளை பாதுகாக்க நீர்வரத்துக் கால்வாய்களை அரசு ஆவணங்களில் உள்ளதைப் போல் சீரமைக்கத் தொடங்கியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து மழைநீர் ஏரிக்கு முறையாக வருவதற்கும், ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு செல்லவும், ஆற்றுக்கு செல்லவும் வகை செய்ய பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டனர். இதன் முதல்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் இல்லாததால் புதிய இணைப்பை ஏற்படுத்தவும் திட்டமிட்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா கூறியதாவது:
ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டத்தில் உள்ள 914 ஏரிகளில் 22 ஏரிகளை பொதுப்பணித் துறை சார்பில் பாதாள மூடுகால்வாய் திட்டம் மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் செல்லாமல் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் ரூ.560 கோடிமதிப்பீட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் இந்நிதியை ஒதுக்கீடு செய்தது.
முதல்கட்டமாக 7 முக்கிய ஏரிகளில் ரூ.78 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புப் பணிகள் நடைபெற்றன. அதன்படி நாராயணபுரம் ஏரியில் இருந்து பள்ளிக்கரணை ஏரிக்கும், சிட்லபாக்கம் ஏரியில் இருந்து செம்பாக்கம் ஏரிக்கும், தாம்பரம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றுக்கும் மற்றும் நந்திவரம் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி, பாப்பன் கால்வாய் இணைப்புஆகியவற்றை பாதாள மூடுகால்வாய் மூலம் இணைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவுற்றன.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன் மற்ற ஏரிகளில் இப்பணி தொடங்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT