Published : 18 Nov 2020 03:55 PM
Last Updated : 18 Nov 2020 03:55 PM
புதுச்சேரியில் புதிதாக 56 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து 5-வது நாளாக உயிரிழப்பு எதுவும் இல்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (நவ. 18) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 3,583 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 43 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 56 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், இன்று உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 608 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 246 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 459 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 705 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
194 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 152 (96.40 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 689 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 25 ஆயிரத்து 636 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
டெல்லியில் நேற்று நானும், முதல்வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். அப்போது இந்தியாவிலேயே புதுச்சேரியில் அதிகளவு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குணமடைந்தவர்கள் சதவீதமும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். என்று மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இதுவரை நாம் 25 சதவீதம் பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுத்துள்ளோம்.
புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தொற்று அதிகரிக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், தீபாவளி முடிந்து 4 நாட்களாகியும் தொற்று குறைவாகத்தான் உள்ளது. அதேபோல், கடந்த 5 நாட்களில் உயிரிழப்பும் எதுவும் இல்லை.
அதேபோல், புதுச்சேரி மாநிலம் முழுவதும் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் தற்போது எவ்வாறு உள்ளனர் என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழுவினர் 27 ஆயிரம் பேரின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். அவர்களில் 3,542 பேருக்கு மட்டும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆகவே, இவர்களுக்கு வரும் 25-ம் தேதிக்குள் மருத்துவர், செவிலியர் வீடு வீடாக சென்று அவர்கள் என்ன சிகிச்சை எடுக்கின்றனர், கரோனா பாதிப்புக்கு முன்பு அந்த நோயாளியின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு தெரிவித்துள்ளேன். அவர்கள் அளிக்கும் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பேன். அதன்பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொற்றின் தாக்கம் குறைந்தாலும் கூட பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தால் மீண்டும் தொற்று அதிகரிக்கும். அதுபோன்ற நிலை டெல்லியில் தசரா பண்டிகையின்போது ஏற்பட்டது. ஆகவே, தற்போது டெல்லியில் கரோனா அதிகரித்து வருகிறது.
மேலும், குளிர்காலத்தில் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு உள்ளிட்டவைகளும் வரும். எனவே, சுகாதாரத்துறை அனைத்துப் பணிகளையும் பார்க்கும்படி கூறியுள்ளேன். இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து தொற்று வராமல் தடுக்க விழிப்புடன் இருந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT