Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
திருவண்ணாமலையில் காவல் துறையின் தடையை மீறி நேற்று வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையில் நேற்று பாஜகவினர் வேல் யாத்திரை நடத்த முயற்சித்தனர். முன்னதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசும்போது,“திருத்தணியில் வேல் யாத்திரை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. திருச்செந்தூரில் டிசம்பர் 7-ம் தேதி நிறைவு பெற உள்ளது. திருவண்ணாமலையில் வேல் யாத்திரை நடைபெறுகிறது. கரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்து வைத்துள்ள தமிழக அரசு, பக்தர்களின் நம்பிக்கையான கிரிவலத்துக்கு தடை விதித்துள்ளது.
ஆன்மிகவாதிகளின் கோரிக்கையை ஏற்று கிரிவலம் செல்லவும், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசு அனுமதி வழங்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் சகோதரிகள் பாஜகவையும் மற்றும் பிரதமர் மோடியையும் ஆதரித்து வருகின்றனர்.
கரோனா காலத்தில் உலகமே ஆட்டம் கண்ட நேரத்தில், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையை பிரதமர் வழங்கி உள்ளார். அந்த தொகையை கொண்டு விவசாய தேவைக்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரதமர் மோடியின் திட்டங்கள் சென்றடைந்துஉள்ளன.
கந்த சஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு பின்னணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளார். கருப்பர் கூட்டத்தையும், கயவர் கூட்டத்தையும் காவி கூட்டம் விரட்டியடிக்கும். திமுக கூட்டணிக்கும், கருப்பர் கூட்டத்துக்கும் தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும்.
அதிக எம்எல்ஏக்களை கொண்டு பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். நாம், கை காட்டுபவர்தான் முதல்வராக இருக்க போகிறார். நமது பணியை திட்டமிட்டு செய்வோம். எத்தனை தடைகள் வந்தாலும், வேல் யாத்திரை தொடர்ந்து செல்லும். திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறும்போது, அசுரர்களை அழிக்க திரண்டு வாருங்கள்” என்றார்.
இதில், பாஜக மாநில துணைத் தலைவர் மற்றும் வேல் யாத்திரை பொறுப்பாளர் கே.எஸ். நரேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ். தணிகைவேல் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம், மாவட்ட துணைத்தலைவர் எம். அருணை ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரையை தொடங்க முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT