Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM
சாலை விரிவாக்கத்துக்காக தென்னேரிக்கரையின் ஓரப்பகுதி வெட்டப்பட்டதால் கரை பலமிழந்து காணப்படுவதாகவும், மழை அதிகரித்தால் உடையும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துராமலிங்கம் அந்த இடத்தை ஆய்வு செய்து கரைகளின் மீது மண்ணை கொட்டி பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் சாலையில் தென்னேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று. இந்த ஏரி 18 அடி ஆழம் கொண்டது; 7 மதகுகள் உள்ளன. இந்த ஏரி நீரை பயன்படுத்தி 5,588 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னேரி, மஞ்சம்பேடு, விளாகம், தென்னேரி அகரம், அயிமிச்சேரி, நாவிட்டான் குளம், வாரணவாசி, சின்ன மதுரப்பாக்கம், பெரிய மதுரப்பாக்கம், கட்டவாக்கம், தொள்ளாழி, தேவரியம்பாக்கம், திருவங்கரனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் செல்கிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் இந்த ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதற்கு அருகில் உள்ள 28 ஏரிகள் நிரம்பியதால் அந்த ஏரிகளில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த ஏரியை ஒட்டி வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் சாலையை 16 கிமீ தூரத்துக்கு விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியின்போது தென்னேரி அருகே 200 மீட்டர் அளவுக்கு ஏரிக்கரையின் ஒரத்தை வெட்டி இந்தச் சாலை போடப்படுகிறது. வெட்டப்பட்ட மண் ஏரிக்கரையின் மீதே கொட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏரிக்கு அதிக தண்ணீர் வருவதால் கரை பலமிழந்து இருப்பதாகவும் உடையும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் பலர் அச்சம் தெரிவித்தனர்.
"இந்த ஏரிக்கரையை ஒட்டி சாலை அமைக்கும்போது கரையின் ஒருபகுதி வெட்டப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாமல் அந்தப் பகுதியில் கான்கிரீட் அமைத்து தரப்படும் என்று அப்போது பணி செய்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பணிகளை மழைக்காலத்துக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். ஆனால் முடிக்காததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று மக்கள் கூறினர்.
இந்த ஏரியை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துராமலிங்கம், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் சரிந்த மண்ணை கொட்டி பலப்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்னர் ஆட்சியர் (பொறுப்பு) முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது,
"சாலை அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண் ஏரிக்கரையின் மீதே கொட்டப்பட்டுள்ளது. மழையில் அந்த மண் மட்டுமே சரிந்து விழுந்துள்ளது. ஏரிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக கீழே சரிந்துள்ள மண்ணை கொட்டி கரையை மேலும் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT