Published : 17 Nov 2020 08:26 PM
Last Updated : 17 Nov 2020 08:26 PM
எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களுக்கும் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். INI CET என்ற தனித்தேர்வு நடத்தக் கூடாது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“திறமையான மருத்துவர்களை உருவாக்க வேண்டும், தகுதியான மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும், மாணவர் சேர்க்கையில் நிலவும் முறைகேட்டைத் தடுக்க வேண்டும், ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமைகளிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் என்ற ஒரே நுழைவுத் தேர்வை மத்திய அரசு திணித்தது.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், மத்திய அரசு நீட் தேர்வை திணித்தது. இது பல்வேறு பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கி வருகிறது. மாநில உரிமையையும் பறித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிய மத்திய அரசு, எய்ம்ஸ், ஜிப்மர், (AIIMS, JIPMER) போன்ற தனது 11 மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் தனியாக INI CET என்ற புதிய நுழைவுத் தேர்வைப் புகுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது. அது, நீட் தேர்வைக் கொண்டு வந்த நோக்கத்திற்கே எதிராக உள்ளது.
INI CET மாணவர்களுக்கு கூடுதல் சுமையை, சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே,
* INI CET நுழைவுத் தேர்வை ரத்து செய்திட வேண்டும் .
* அனைத்து மத்திய கல்வி நிறுவன இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் , நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவற்றுக்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு (நீட்) மட்டும்தான் நடத்தப்பட வேண்டும். இவ்விடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்திட வேண்டும்.
* எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள ‘நிறுவன உள் ஒதுக்கீடு (Instituitional inhouse Reseravation) அரசியல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு முரணானது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
* எய்ம்ஸ் மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை ,
அவை அமைந்துள்ள மாநிலங்களின் மாணவர்களுக்கே வழங்கிட வேண்டும்.
அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும்.
* தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு அத்தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். அதற்கு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
*மருத்துவக் கல்வியில் உள்ள ‘அகில இந்திய ஒதுக்கீட்டு முறை’(All India Quota system), மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அம்மாநில மாணவர்கள் முழுமையாக பெறுவதற்குத் தடையாக உள்ளது.
மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதிக்கச் செய்கிறது. சமூக நீதிக்கு எதிராக உள்ளது. மாநில பொது சுகாதாரத்துறையைப் பாதிக்கச் செய்கிறது. எனவே, மருத்துவக் கல்வியில் உள்ள அகில இந்தியத் தொகுப்பு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமை தமிழக அரசிடம் இருந்து 2016 ஆம் ஆண்டில் பிடுங்கப்பட்டுள்ளது. மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்தது போல், மாணவர் சேர்க்கையை நடத்தும் முழு உரிமையும் மீண்டும் தமிழக அரசிடம் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நடத்துவது போலவே, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் தமிழக அரசே நடத்த வேண்டும்.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும் என மத்திய அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT